ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகள் மீது 50% முதல் 100% வரை வரிகளை  விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய பொருளாதாரத் தடை மசோதாவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனால் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் இந்த மசோதா 262-159 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு டிரம்ப் இதில் கையெழுத்திட்டுள்ளார்.'லிண்ட்சி ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் மீதான பொருளாதாரத் தடை சட்டம் 2026' (Lindsey O Graham Sanctioning Russia and Iran Act of 2026) என்ற இந்தச் சட்டம், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போருக்குச் செல்லும் நிதி ஆதாரங்களைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ரஷ்ய அதிகாரிகள், வங்கிகள், எரிசக்தித் துறை மற்றும் மாஸ்கோவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் வெளிநாட்டு அமைப்புகளை இலக்காகக் கொள்கிறது.ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவைச் சார்ந்திருப்பதைத் தடுப்பதற்காக, ரஷ்யாவுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது வரி விதிக்க இந்தச் சட்டம் டிரம்பிற்கு அதிகாரமளிக்கிறது.பிரதிநிதிகள் சபையின் வழிமுறைகள் மற்றும் வழிகள் குழுவின் (House Ways and Means Committee) கூற்றுப்படி, இந்தச் சட்டம் ரஷ்ய பொருட்களின் மீது 500% வரை வரி விதிக்க வழிசெய்கிறது.மேலும், ரஷ்ய எரிசக்தியைப் பெருமளவில் இறக்குமதி செய்யும் மற்றும் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க உதவும் நாடுகள் உட்பட, ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளின் பொருட்களின் மீது 100% வரை வரி விதிக்கவும் இது வகைசெய்கிறது.