மாத்தறை – வல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில்  21 கிலோவுக்கும் அதிகளவிலான 'ஐஸ்'  போதைப்பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவரும் 34 வயதுடைய ஆணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.அம்பாந்தோட்டை பிரிவு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் குழுவினர் நேற்று திங்கட்கிழமை (21) மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக  சிறிலங்கா காவல் துறை   ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எப்.யு. வூட்லர் தெரிவித்தார். சந்தேகநபர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனையிட்ட பொலிஸார், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.மேலும், சந்தேகநபர்களுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் கார் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும், 3  கைபேசிகளையும்  சிறிலங்கா காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்ற பின்னர், மாத்தறை பிரிவு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி  காவல் துறை அத்தியட்சகர் எப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.இன்னும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.