மன்னார் நகர்ப் பகுதியில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதிக்கும் வகையில், சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிவந்த 3 பிரபல உணவகங்கள் மீது மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிரடி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு தொடர்ச்சியாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை தொடர்ந்து, மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட் அறிவுறுத்தலுக்கு அமைய, இந்த உணவகங்களில் திடீர் ஆய்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இந்த ஆய்வின்போது, குறித்த உணவகங்கள் கடுமையான சுகாதாரச் சீர்கேடுகளுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டது.
குறிப்பாக, உணவுகள் தயாரிக்கப்படும் இடங்கள் மிகுந்த அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும் காணப்பட்டன. உணவகம் முழுவதும் ஈக்கள் அதிகளவில் மொய்த்துக்கொண்டிருந்தன. கழிவு நீர் வெளியேற முறையான வசதிகள் அவ்விடங்களில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சேகரிக்கப்படும் குப்பைகள் உரிய முறையில் அகற்றப்படாமல் சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்தமை உட்பட குறித்த உணவகங்களுக்கு உரிய சுகாதாரச் சான்றிதழ்கள் பெறப்படவில்லை.
அதேவேளை உணவு தயாரிக்கும் பணியாளர்கள் எவ்வித மருத்துவச் சான்றிதழும் இன்றி பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அத்துடன் முகக்கவசம் மற்றும் கையுறை அணியாமல் சுகாதாரமற்ற முறையில் பணியாளர்கள் உணவுகளைக் கையாண்டுள்ளதுடன் கழிவறைகளுக்கு அருகிலேயே உணவு தயாரிக்கும் சூழல் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தக் கடுமையான சுகாதார மீறல்கள் காரணமாக, குறித்த மூன்று உணவகங்களின் உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சுகாதாரச் சீர்கேடுகள் இடம்பெறாதவாறு கடுமையான எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
பொது மக்களின் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடும் உணவகங்கள் மீது தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சுகாதாரமற்ற முறையில் இயங்கும் உணவகங்கள் தொடர்பாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையில் முறைப்பாடுகள் அளிக்கமுடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 3 உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space