நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 21 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 19 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின்தெரிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (15) காலை 6.00 மணி நிலவரப்படி இந்தத் தரவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தின் இராஜங்கனை, நாச்சத்துவ மற்றும் யான் ஓயா நீர்த்தேக்கங்களும் பதுளை மாவட்டத்தின் அம்பேவெல நீர்த்தேக்கம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹெர, திஸ்ஸவாவி, வீரவில யோதவாவி மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்களும் வான்பாய்கின்றன.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் அம்பகொல வாவி, உஸ்கல சியம்பலன்கமுவ, மெதியாய, மாகல்ல மற்றும் தெதுறுஓயா நீர்த்தேக்கங்களும் கண்டி மாவட்டத்தின் நாலந்த மற்றும் வாமெடில்ல, மொனராகலை மாவட்டத்தின் ஹதபானகல மற்றும் அலிகொடஆர, புத்தளம் மாவட்டத்தின் இங்கினிமிட்டிய மற்றும் தப்போவ மற்றும் மன்னார் மாவட்டத்தின் யோத வாவி உள்ளிட்ட நீர்த்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இராஜங்கனை நீர்த்தேக்கத்தின் 02 வான் கதவுகள் 03 அடி வீதம் திறக்கப்பட்டு, வினாடிக்கு 1,600 கன அடி நீர் கலா ஓயாவிற்குள் வெளியேற்றப்படுகிறது.
லுணுகம்வெஹெர நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் 04 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, வினாடிக்கு 1,740 கன அடி நீர் கிரிந்தி ஓயாவிற்குள் விடப்படுகிறது.
வெஹெரகல நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் 03 அங்குலம் வீதம் திறக்கப்பட்டு, மாணிக்க கங்கைக்குள் வினாடிக்கு 700 கன அடி நீர் பாய்கிறது.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மீ ஓயாவிற்கு வினாடிக்கு 5,480 கன அடி நீர் வெளியேறுகிறது.
இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் 06 வான் கதவுகள் ஊடாக வினாடிக்கு 6,000 கன அடி நீர் மீ ஓயாவிற்குள் விடப்படுகிறது.
எனவே, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு மற்றும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பல மாவட்டங்களில் நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space