2022ஆம் ஆண்டு காலி முகத்துவார 'கோட்டா கோ ஹோம்' போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தேசபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்டமா அதிபரால் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்குஅனுப்பப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீடு நேற்று திங்கட்கிழமை (25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
ஏ.எச்.எம்.டி. நவாஸ், அசல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தின் முன்னிலையில் இந்த மேன்முறையீடு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், எதிர்மனுதாரரான தேசபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்போது, மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயத்தின் தலைவர் நீதியரசர் நவாஸ், இந்தக் குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என கேள்வியெழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாத காலத்திற்குள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதன்போது, தேசபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் சாட்சியங்களை முன்வைக்கையில், தனது கட்சிக்காரருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படுவதாயின் இந்த வழக்கைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதில் அர்த்தமில்லை எனக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், முன்வைக்கப்பட்ட விபரங்களை பரிசீலித்த மூவரடங்கிய நீதியரசர்கள் ஆயம், இந்த மனுவை மீண்டும் செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி அழைப்பதற்கு உத்தரவிட்டது.
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய நடவடிக்கை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space