சீதுவை சீமெந்து தொழிற்சாலைக்கு கத்தோலிக்கதிருச்சபை எதிர்ப்பு!
Ad Space
Ad Space
சீதுவை, லியனகமுல்ல பகுதியில் தற்போது அமைக்கப்பட்டு வரும் சீமெந்து உற்பத்தித் தொழிற்சாலைக்கு கத்தோலிக்க திருச்சபை தனது பலத்த எதிர்ப்பைத் தெரிவிப்பதாக அதன் திருச்சபை ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த தெரிவித்தார்.கத்தோலிக்க திருச்சபை மற்றும் சீதுவை, லியனகமுல்ல புனித தோமஸ் கல்லூரியின் பெற்றோர்கள் இணைந்து அக்கல்லூரி மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (19) நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அருட்தந்தை இவ்வாறு குறிப்பிட்டார்.குறித்த பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கொழும்பு பேராயர் மற்றும் கத்தோலிக்க திருச்சபையிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ்வாறான எதிர்ப்பை வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொழும்பு பேராயரின் ஆலோசனையின் பேரில் இந்த எதிர்ப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த அருட்தந்தை ஹெஷான் நிலந்த, இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.இந்த நிர்மாணப்பணி அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படலாம் என சுட்டிக்காட்டிய அருட்தந்தையர்கள், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இந்த நிர்மாணப்பணியை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் எதிர்காலத்தில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சட்டத்தரணி இசூரி ரொட்ரிகோ மற்றும் முத்துராஜவெல பாதுகாப்பு பேராயர் குழுவின் அழைப்பாளர் தினேஷ் நாணயக்கார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Ad Space
Ad Space