2027 ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.அக்காலப்பகுதியில் சுமார் 750 மெகாவோட் மின்சாரத் திறனை மின்கலங்கள் மூலம் பெற்றுக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் இதன் மூலம் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என மின்சார உற்பத்தி தேசிய அமைப்புகள் (தனியார்) நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பிரதீப் பிரியதர்ஷன தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது மின்கலங்கள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காக அவற்றை மின் கட்டமைப்போடு இணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே 160 மெகாவோட் மின்கலங்கள் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு பொருத்தப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, மேலும் 250 மெகாவோட் மின்சாரத்திற்காக தனியார் துறையின் முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏலங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், அதுவும் எதிர்வரும் ஆண்டின் மார்ச் - ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மின் கட்டமைப்பில் இணைக்கப்படும்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் 100 மெகாவோட் மின்சாரத்தை மின் விநியோக நிறுவனம் மூலம் வழங்குவதற்காக ஏலங்கள் கோரப்பட்டுள்ளது.
இதனைத் தவிர தரையில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின் உற்பத்தி நிலையங்களுக்கு மின்கலங்களைப் பொருத்துவதற்காக 150 மெகாவோட்டிற்கான ஏலங்களைக் கோர எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அனைத்து நடவடிக்கைகள் மூலமும், எதிர்வரும் 2027ஆம் ஆண்டின் இறுதிக்குள் தேசிய மின் கட்டமைப்பில் மின்கலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 750 மெகாவோட் மின்சாரம் இணைக்கப்படும் என்பதால் டீசல் பயன்பாட்டைக் குறைக்க வழிவகை ஏற்படும்.
மேலும், 2028-2029 ஆம் ஆண்டுகளில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் தொடர்ந்தும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனுடன் இணையாக மின்கல கட்டமைப்பையும் இணைப்பதன் மூலம் எரிபொருள் மூலமான மின் உற்பத்தியையும் குறைத்துக்கொள்ள முடியும்.
இதன் மூலம் 30 முதல் 35 பில்லியன் ரூபாய் வரையான தொகையைச் சேமிக்க முடியும்.இதன் பலனைப் பொதுமக்களுக்கு வழங்கும் வகையில் மின்சாரக் கட்டணத்தையும் குறைக்க முடியும் என்றார்.
2027ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைத்து மின்சாரத்தை உற்பத்தி செய்ய நடவடிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space