108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை
Ad Space
Ad Space
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் மூலமாக 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மொத்தமாக 1,353 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனைத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு விதிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இது தொடர்பாக 108 நிர்வாகத்தின் மாநிலத் தலைவர் செல்வகுமார், மண்டலத் தலைவர் முகமது பிலால் ஆகியோர் கூறியதாவது: தேர்தல் காலத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களில் மருத்துவ உபகரணங்கள் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
அனுமதி இல்லாத எவரும் ஆம்புலன்ஸில் ஏறக் கூடாது. அங்கீகாரம் பெற்ற ஊழியர்கள், தமிழக அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மட்டுமே ஆம்புலன்ஸ் வாகனங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
நோயாளி அல்லது அவருடன் வரும் நபர்கள் ஆம்புலன்ஸில் உள்ள பெட்டிகள், உபகரணங்களை திறக்காமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும். ஆம்புலன்ஸில் வருவோர் தேர்தல் தொடர்பான பொருள்களை வைத்திருந்தால் அவற்றை அனுமதிக்கக்கூடாது.
நோயாளி மற்றும் அவருடன் வரும் நபர்கள் வைத்திருக்கும் பணம் பற்றிய விவரத்தை ஆவணத்தில் பதிவு செய்ய வேண்டும். பணி நேரத்தில் கட்சிகள் மற்றும் சின்னங்கள் சார்ந்த பொருள்களை வைத்திருக்கக் கூடாது.
ஆம்புலன்ஸில் தேர்தல் பிரச்சார ஸ்டிக்கர்கள் அல்லது சின்னங்களை ஒட்டக்கூடாது. அலுவல் நேரத்தில் அரசியல் விவாதங்களில் ஈடுபடுவதற்கு ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார பொருட்கள் உள்ள இடங்களுக்கு அருகே அவசர சேவை வாகனங்களை நிறுத்தக்கூடாது.
ஆம்புலன்ஸ் நிர்வாகத்தின் முன் அனுமதி இல்லாமல் நோயாளியின் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க அனுமதிக்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம். இதனை மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.
Ad Space
Ad Space