நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அசாதாரண சம்பவங்கள் மற்றும் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தனது தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மோதல்கள் மற்றும் அசம்பாவிதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை காண முடிகிறது. வெலிக்கடை, நீர்கொழும்பு, பள்ளன்சேனை, குருவிட்ட, மஹர மற்றும் மெகசின் ஆகிய சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து பேரவலங்கள் அரங்கேறி வருகின்றன. பள்ளன்சேனை போன்ற திறந்தவெளி முகாம்களைக் கூட ஒழுங்காகக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற முதல் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் சென்றது. இது தொடர்பாகப் பொறுப்பு வாய்ந்த அமைச்சரான ஹர்ஷன நாணயக்காரவிடம் வினவிய போது, அவர் சமூக ஊடகங்களில் இதனைச் சரியாகப் பார்க்கவில்லை என்றும், எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்று தனக்குத் தெரியாது என்றும் மிகவும் பொறுப்பற்ற முறையில் பதிலளித்தார். அத்துடன், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகளுக்குப் போதிய அதிகாரம் வழங்கப்படவில்லையா எனக் கேட்டதற்கு, அதிகாரங்களை வழங்க வேண்டுமா என்பது பற்றியும் தனக்குத் தெரியாது எனக் கூறி தனது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார்.
இவ்வாறான அனுபவமற்ற மற்றும் குழப்பமான நிலையில் உள்ள ஒரு அமைச்சரைக் கொண்டு நாட்டின் சிறைச்சாலை நிர்வாகத்தைச் சீராக நடத்த முடியுமா என்ற பலத்த சந்தேகம் எழுகிறது. சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான இடநெருக்கடி மற்றும் அடிப்படை வசதிகள் இன்மையே இத்தகைய வன்முறைகளுக்கு முக்கிய காரணமாகும்.
நாடு முழுவதும் உள்ள 38 சிறைச்சாலைகளில் சுமார் 10,800 கைதிகளை மட்டுமே தங்கவைக்க முடியும். ஆனால், தற்போது 42,000க்கும் அதிகமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். 'சிறைக்கைதிகளும் மனிதர்களே' எனப் பொறிக்கப்பட்டிருந்தாலும், உள்ளே மனிதர்களாக வாழக்கூடிய எவ்வித வசதிகளும் இல்லை. பள்ளன்சேனை முகாமில் 470 பேரை மட்டுமே தங்கவைக்க முடியும் என்ற நிலையில், அங்கு 1,573 பேர் வரை அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, 362 பேருக்கு வசதியுள்ள குருவிட்ட சிறைச்சாலையில் 1,154 பேரும், 499 பேருக்கு வசதியுள்ள மெகசின் சிறைச்சாலையில் அதன் கொள்ளளவை விட ஆறு மடங்கு அதிகமாக 3,046 பேரும் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், நீர்கொழும்பு சிறைச்சாலையில் 496 பேருக்குப் பதிலாக 2,403 பேரும், மஹர சிறைச்சாலையில் 991 பேருக்குப் பதிலாக 4,470 பேரும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பத்து பேர் இருக்க வேண்டிய இடத்தில் நூறு பேர் அடைக்கப்படும் போது கைதிகளிடையே பதற்றமும் மோதல்களும் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. போதுமான தூக்கமின்மை, இடநெருக்கடி ஆகியவற்றால் அங்கே அமைதியான சூழல் இல்லாது போயுள்ளது. இதன் காரணமாக நேர்மையாகக் கடமையாற்றிய சிறைச்சாலை அதிகாரிகளுடன் சேர்த்துப் பல கைதிகளும் தங்களது உயிர்களை இழக்க நேரிட்டுள்ளது. இது மிகப்பெரிய குற்றச் செயலாகும்.
நீதிமன்ற விசாரணைகள் தாமதமடைதல், இரசாயனப் பகுப்பாய்வுத் துறையின் தாமதங்கள் மற்றும் சிறிய பிரச்சினைகளுக்காகக் கைதிகளைச் சிறையில் அடைத்தல் போன்ற தவறான நடைமுறைகளே இந்த இடநெருக்கடிக்கு பிரதான காரணமாகும். இந்த ஒட்டுமொத்தப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும். பாராளுமன்றத்தில் நீதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போது, அதனைத் தோற்கடித்து அரசாங்கம் சிரித்துப் பேசி மகிழ்ந்தது. ஆனால், அதன் பின்னரும் சிறைச்சாலைகளில் வன்முறைகள் தொடர்கின்றன. எனவே, அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உடனடியாகத் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
ஹர்ஷன நாணயக்கார தோல்வியை ஒப்புக்கொண்டு உடனடியாகப் பதவி விலக வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space