பாதாள உலகக் குழுவை சேர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி என அறியப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் 'ஹரக் கடா' என்பவரை தகுந்த பாதுகாப்புடன் பொருத்தமான சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (3) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் இந்த விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போதே அவர் இவ்வாறு உத்தரவிட்டார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கீழ் தடுப்பு காவலில் இருந்தபோது தப்பிச் செல்வதற்கு சதிதிட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் ஹரக் கடா' உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு நேற்றைய தினம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி, பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை தொடர முடியாது எனவும், தண்டனைச் சட்டக்கோவையின் கீழ் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய முடியும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அன்றைய தினம் அந்த உத்தரவைப் பிறப்பித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதாக இருந்தால், அதனை சட்டமா அதிபருக்கு அறிவிக்குமாறு தெரிவித் திருந்தார்.
அதன்படி, நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கடந்த முறை வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி நீதிமன்றத்துக்கு அறிவித்தார்.
இது தொடர்பில் அரச சட்டத்தரணி மேலும் விடயங்களை முன்வைக்கையில், பிரதிவாதிகள் தொடர்பில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் செயற்பட முடியாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டு நாட்கள் மாத்திரமே கடந்துள்ளன. ஆகையால் குறித்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு 14 நாட்கள் கால அவகாசம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
ஆகையால், மேல்முறையீடு செய்யக்கூடிய காலப்பகுதிக்குள் பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவது பொருத்தமானது அல்ல எனவும், பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை பரிசீலிக்குமாறும் அரச சட்டத்தரணி கோரிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
அதற்கமைய மூன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலனை செய்த நீதிபதி, பிரதிவாதிகளின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி அறிவிப்பதாக திகதி நிர்ணயித்தார்.
பிரதிவாதிகளுக்கு எதிரான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தடுப்புக்காவல் உத்தரவு அமைய தங்காலை பழைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன எனும் 'ஹரக் கடா' என்பவரை தகுந்த பாதுகாப்புடன் பொருத்தமான சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு ஓகஸ்ட் 20 ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஹரக் கடா'வை தகுந்த பாதுகாப்புடன் பொருத்தமான சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space