இறக்குமதி கொடுப்பனவுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலானது, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கல்ல, மாறாக வெளிநாட்டு செலாவணி பரிவர்த்தனைகளின் மீதான கண்காணிப்பை வலுப்படுத்துவதற்காகவே அமுல்படுத்தப்பட்டுள்ளது என நிதி, திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இறக்குமதி கொடுக்கல்-வாங்கல்களுடன் தொடர்புடைய வெளிநாட்டு பணவனுப்பல்களை கண்காணிப்பதையும் மேற்பார்வை செய்வதையும் வலுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (19) முதல் அமுலாகும் வகையில் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இறக்குமதிகளுடன் தொடர்புடைய வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகள் முறையாகக் கண்காணிக்கப்படுவதை உறுதி செய்வதும், ஒழுங்கற்ற வழிகளில் வெளிநாட்டு செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதை நோக்காகக் கொண்டு புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன
சில தரப்பினர் நிறுவனங்களை பதிவு செய்து, வெளிநாட்டு செலாவணியை வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவங்கள் குறித்து பாராளுமன்றத்துக்கு விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் இறக்குமதியாளர்கள் தங்களது முகவரி, வங்கி கணக்கு விபரங்கள், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் கொடுப்பனவுகளுக்குப் பயன்படுத்தப்படும் நாணயம் உள்ளிட்ட விரிவான தகவல்களை வழங்க வேண்டும். இறக்குமதி சார்ந்த ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் சம்பந்தப்பட்ட வங்கியினால் ஒரு தனித்துவமான அடையாள எண் வழங்கப்படும். இதன் மூலம் அதிகாரிகள் கொடுப்பனவுகளை துல்லியமாகக் கண்காணிக்கவும், அவற்றை இறக்குமதி நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் முடியும்.
இந் நடவடிக்கைகள் முறையான வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்காக அல்லாமல், வெளிநாட்டு கொடுப்பனவு பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவையாகும் என்றார்.
வெளிநாட்டு செலாவணியை வலுப்படுத்தவே புதிய மட்டுப்பாடுகள் - பிரதியமைச்சர் அனில் பெர்னாண்டோ தெரிவிப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space