சீதுவையில் அமைந்துள்ள விஜய குமாரதுங்க நினைவு வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகளை மேலும் பலப்படுத்துவதற்கும், அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் சுகாதார அமைச்சு விசேட அவதானம் செலுத்தியுள்ளது.
சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களின் தலைமையில், முன்னாள் ஜனாதிபதியும் இவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் சபைத் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்களின் பங்கேற்புடன் அண்மையில் சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதன்போது வைத்தியசாலையின் தற்போதைய நிலைவரம் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
மறைந்த கலைஞர் விஜய குமாரதுங்கவின் நினைவாக, 1999 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இந்த வைத்தியசாலை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக கையளிக்கப்பட்டது. இந்தகலந்துரையாடலின் போது வைத்தியசாலையின் விசேட பிரிவுகளின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டறிந்தார். மேலும் வைத்தியசாலையின் செயல்திறன், அரசாங்க மானியங்கள், வருமானம் மற்றும் செலவுகள், நன்கொடைகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான மூலதன வரவு செலவுத் திட்டம் போன்ற நிர்வாக விடயங்கள் குறித்தும் அமைச்சர் இதன்போது விசேட கவனம் செலுத்தியிருந்தார்.
வைத்தியசாலையில் தற்போது செயலிழந்துள்ள மருத்துவ உபகரணங்களை விரைவாக புனரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சுகாதார அமைச்சு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என அமைச்சர் உறுதியளித்தார். வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்படும் கண் சிகிச்சை மற்றும் கண் அறுவை சிகிச்சை சேவைகளை அவர் பெரிதும் பாராட்டியதுடன், அச்சேவைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான அமைச்சின் திட்டங்களையும் முன்வைத்தார். குறுகிய கால அபிவிருத்தி முன்மொழிவுகள் குறித்து ஆராய்ந்த அமைச்சர், வைத்தியசாலையின் சேவைகளை தேசிய மட்டத்தில் பலப்படுத்துவதற்கான ஒரு விரிவான திட்டத்தின் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.
விஜய குமாரதுங்க வைத்தியசாலையின் சேவைகளை விரிவுபடுத்த சுகாதார அமைச்சு தீர்மானம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space