அண்மையில் ஏற்பட்ட தித்வா அனர்த்தத்தைக் கூறி தற்போதைய அரசாங்கம் வாக்குறுதிகளைத் தட்டிக்கழிக்க கூடாது. இனியும் காலதாமதம் செய்யாது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுமாறு எனது சகோதரரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுக்கிறேன் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேசிய சமாதான பேரவையினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நான் இந்தச் சபையிலே பேசுவதற்கு முன்பதாகவே அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே ஆகியோர் இங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். மார்க் ஆண்ட்ரே இங்கிருந்திருந்தால் கடந்த காலத்திலே யுத்தம் எவ்வாறு இவ்வளவு கொடூரமான முறையில் முன்னெடுக்கப்பட்டது என்பது குறித்து அவரிடம் சில உண்மைகளை நான் சொல்லவிருந்தேன்.
கடந்த கால யுத்த காலத்தில் ராஜபக்ஷ அரசாங்கம் இருந்தபோது, சர்வதேச அமைப்புகள் தங்களது அலுவலகங்களை மூடிவிட்டு இங்கிருந்து வெளியேறின. அது ஒரு சாட்சிகளற்ற கொடூர யுத்தமாகவே பிரகடனப்படுத்தப்பட்டது. இறுதியாகப் பெரும் குண்டு மழைகளுக்கு மத்தியில்தான் அந்த யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. நண்பர் சிறீதரன் குறிப்பிட்டதைப் போலப் பல இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டார்கள். யுத்த காலத்தில் நிலவிய கொடூரமான வெள்ளை வேன் கடத்தல் கலாசாரம் நிலவிய காலகட்டத்தில் என்னைக் கொலை செய்வதற்கும் கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதிர்ஷ்டவசமாக நான் தப்பித்துக்கொண்டேன்.
கடந்த ரணில் - மைத்திரி நல்லாட்சி காலத்தில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வழிநடத்தல் குழுவில் நானும் சிவஞானம் சிறீதரனும் உறுப்பினர்களாக இருந்தோம். அந்த புதிய அரசியலமைப்பு உருவாக்கும் பணிகள் பாதியிலேயே நின்றுபோயின. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது, கடந்த காலத்தில் அரசியலமைப்பு பணிகள் எங்கு நிறுத்தப்பட்டதோ அங்கிருந்து மீண்டும் ஆரம்பிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், இதுவரை அதனைச் செய்யவில்லை. அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலோ அல்லது அவசரமாக ஆட்சி அமைப்பதிலோ எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. இன நல்லிணக்கமும் தேசிய சமாதானமும் ஏற்படுவதே எமக்கு முக்கியமாகும்.
மக்களின் காணி உரிமைகள், வீட்டு வசதிகள் மற்றும் வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஒரு விசேட கூட்டத்தைக் கூட்டுவதாக அமைச்சர் விஜயபால எனக்கு கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், நேற்று இரவு ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி என்னைத் தொடர்புகொண்டு, ஜனாதிபதி மட்டக்களப்பு சென்றுள்ளதால் இன்றைய தினம் அந்தக் கூட்டத்தை நடத்த முடியாது எனத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களின் குரலை ஒலிப்பதற்கே பாராளுமன்றம் இருக்கின்றது. எமது இந்த நிலைப்பாட்டை ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அரசாங்கத்துக்கு எதிராகப் பேசும்போதெல்லாம் எம்மை துரோகிகள் என முத்திரை குத்த முடியாது.
இந்த அரசாங்கத்தின் பதவிக்காலத்தில் இன்னும் மூன்று வருடங்களே எஞ்சியுள்ளன. எனவே, சுனாமி வந்தது, தித்வா அனர்த்தம் இருந்தது, சந்திரன் விழுந்தது, சூரியன் மறைந்தது எனப் பல்வேறு காரணங்களைக் கூறிக்கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம். நல்ல விடயங்களைச் செய்ய அரசாங்கம் முன்வந்தால் எமது இரு கரங்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க நாம் தயாராகவே இருக்கின்றோம். எனவே, இனியும் காலதாமதம் செய்யாது மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றுமாறு எனது சகோதரரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இந்த மாநாட்டு மேடையினூடாகக் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
வாக்குறுதிகளை தாமதிக்காது நிறைவேற்ற வேண்டும்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space