நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (1) இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி 18 வயதுடைய சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் வீதி 198 ஆவது மைல்கல்
வவுனியா ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வீதி 198 ஆவது மைல்கல்லுக்கு அருகாமையில், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று பாதசாரி மீது மோதுண்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
52 வயதுடைய ஓமந்தை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய லொறி சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் ,மாதம்பை, பம்பல பகுதி
புத்தளம் ,மாதம்பை, பம்பல பகுதியில் தென்னந்தோப்பு ஒன்றினுள் பயணித்துக்கொண்டிருந்த உழவு இயந்திரம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது காயமடைந்த சாரதி சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே மரணித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை மன்னார் மடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மடு மாதா தேவாலயத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வீழ்ந்து விபத்து சம்பவித்துள்ளது.
இதில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
18 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பலாலி – யாழ்ப்பாணம் வீதி
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலாலி – யாழ்ப்பாணம் வீதியில், யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று எதிர்திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த நபர் 28 வயதுடைய கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
குறித்த கார் சாரதியும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் இந்த விபத்து சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வாகன விபத்துகளில் சிக்கி 18 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space