தற்போது உருவாகி வரும் ராஜபக்ஷக்களின் புதிய அரசியல் ஒன்றிணைவுகள் மற்றும் கூட்டணிகள் தொடர்பில் மக்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
தற்போது உருவாகும் இந்த புதிய கூட்டணிகளில் இணைவதற்கு முன்னர், மக்கள் அவற்றின் பின்னால் இருப்பவர்களை நன்கு கவனிக்க வேண்டும். வெளியில் தெரியும் முகங்களை மட்டும் பார்த்து முடிவு செய்யக்கூடாது. நாம் பார்க்கும் போது எதிர்க்கட்சியும் கூட குழப்பமடைந்த நிலைமை தான் காணப்படுகிறது.
இந்த புதிய கூட்டணிகள் மக்கள் நலனுக்காக அன்றி அவை அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன் உருவாகும் அரசியல் கட்டமைப்புகள் ஆகும். எனவே மக்கள் அவசரமாக எந்தவொரு கூட்டணிக்கும் ஆதரவு வழங்கக்கூடாது.
அந்த கூட்டணிகளில் நாமல் ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் அரசியல் முகங்கள் மீண்டும் ஒன்றிணைக்கப்படுகின்றன. அவர்களின் அரசியல் முகமூடிகள் தற்போது மெதுவாக வெளிப்படத் தொடங்கியுள்ளது. மேலும், தயாசிரி ஜயசேகர உள்ளிட்ட சிலர் இந்த கூட்டணிகளை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார்கள்.
எல்லா தரப்பையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய அரசியல் கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் நடைபெறுகின்றன. அதேபோல் எஸ்.எம். சந்திரசேன உள்ளிட்டோரும் இந்த அரசியல் சூழலில் உள்ளனர்
இந்த வகையான அரசியல் ஒன்றிணைவுகள் நாட்டுக்கு மிகவும் ஆபத்தான நிலையை உருவாக்கக்கூடும். இவை ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய பழைய அரசியல் சக்திகளை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகளாகவே நான் பார்க்கிறேன். இவ்வாறான அரசியல் சூழ்நிலைகளின் விளைவுகள் எதிர்காலத்தில் தெளிவாக வெளிப்படும் என்றார்.
ராஜபக்ஷக்களின் புதிய அரசியல் கூட்டணிகள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் !
Ad Space
Ad Space
Ad Space
Ad Space