பெண்கள் ஆணைக்குழுவிலிருந்து கலாநிதி ரமணி ஜயசுந்தர பதவி விலகியுள்ளமையானது, இந்நாட்டின் பெண்களின் உரிமைகள் குறித்த விவகாரத்தை மீண்டும் ஒருமுறை ஆழமான சமூகப் பேச்சாக மாற்றியுள்ளதாக சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பெண்களின் உரிமைகள் தொடர்பில் கடந்த கால ஆட்சியாளர்கள் அழுக்கடைந்த சுவருக்கு வர்ணம் பூசுவது போன்றே அவர்களின் பிரச்சினைகளை கையாண்டு வந்துள்ளனர்.
மேலோட்டமான சில சட்டங்களைக் கொண்டு வருவதைத் தவிர, பெண்களின் அடிமட்டப் பிரச்சினைகள் குறித்து ஒரு விரிவான சமூக உரையாடலை முன்னெடுக்க எவரும் முன்வரவில்லை என்று சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் நிரோஷா குருகே சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு நுகேகொடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தால் பெண்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்ட போதே, அந்த ஆணைக்குழுவிற்குத் தேவையான முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திய போதிலும், அது பெயரளவு அமைப்பாகவே நீடித்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ' பெண்கள் நாம் ஒன்றிணைவோம்" என்ற முழக்கத்துடன் ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமாவது பெண்களின் பிரச்சினைகளில் கூடுதல் அக்கறை காட்டும் என நாட்டின் பெண்கள் பெரும் எதிர்பார்ப்பு கொண்டிருநதோம்.
எனினும், கலாநிதி ரமணி ஜயசுந்தரவின் பதவி விலகல் அந்த எதிர்பார்ப்புகளை வீணடித்துள்ளது. ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட பதவி விலகல் கடிதத்தில் உள்ள விடயங்கள் இதுவரை பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றாலும், அந்த ஆணைக்குழுவிற்குத் தனது பணிகளைச் சுதந்திரமாக முன்னெடுக்கத் தேவையான அடிப்படை வசதிகள் கூட வழங்கப்படவில்லை என்பது வெளிப்படையானது.
குறிப்பாக, பெண்கள் ஆணைக்குழுவிற்கெனத் தனி அலுவலகமொன்று வழங்கப்படாமல், அது மகளிர் விவகார அமைச்சின் ஒரு பகுதிக்குள்ளேயே இயங்கி வந்துள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் ஒரு அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒருஇடத்தில், எவ்வாறு ஒரு சுயாதீன ஆணைக்குழு இயங்க முடியும்? அத்துடன், இவ்வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் கூட ஆணைக்குழுவைப் பராமரிப்பதற்கான உரிய நிதிஒதுக்கீடுகள் செய்யப்படவில்லை.
நாட்டின் பிரதமர் ஒரு பெண்ணாக இருப்பதாலோ அல்லது பாராளுமன்றத்திலும் உள்ளூராட்சி மன்றங்களிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலோ மட்டும் பெண்களின் சமூகப் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. வீடுகளிலும், பொது இடங்களிலும், வேலைத் தலங்களிலும் பெண்கள் தொடர்ந்தும் வன்முறைக்கும் அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர்.
தனியார் துறை பெண் ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மற்றும் கல்வி உரிமைகள் மீறப்படுதல் போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாக வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் ஏனைய தேர்தல் வாக்குறுதிகளைப் போலவே வெறும் தேர்தல் தந்திரங்களாகவே தற்போதைய சூழலில் தென்படுகிறது.
எனவே, பெண்களின் உரிமைகளை உண்மையாக வென்றெடுப்பதற்கு ஒரு வலுவான மக்கள் சக்தியை ஒன்றிணைக்க வேண்டிய நேரம் வந்துள்ளது.
அதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் சார்பாக நிரோஷா குருகே அழைப்பு விடுத்துள்ளார்.
ரமணி ஜயசுந்தர பதவி விலகல் ; ஆழமான சமூகப் பேச்சாகியுள்ளது - சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் தெரிவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space