யானைத் தந்தங்கள் மற்றும் சந்தன மரத்தைக் கொண்டு நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட பேழை ஒன்றை விற்பனை செய்ய முயன்ற நபரொருவர், வனவிலங்கு அதிகாரிகளால் நிட்டம்புவை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹொரகொல்ல தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கடந்த புதன்கிழமை (03) மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த குறித்த பேழையுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைப்பற்றப்பட்ட பொருளுடன் அவர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ், பாதுகாக்கப்பட்ட விலங்குகள் அல்லது மரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை வைத்திருப்பது, காட்சிப்படுத்துவது, கொண்டு செல்வது அல்லது விற்பனை செய்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது என வனவிலங்கு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அழிந்து வரும் நிலையிலுள்ள விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, வனவிலங்கு அதிகாரிகள் தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்து வருவதாக அத்திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
யானைத் தந்தம், சந்தன மரத்திலான பேழையை விற்க முயன்றவர் கைது!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space