ஸ்ரீவைகுண்டத்தில் முழுமையாக நிரப்பாமல் தவெக வேட்பாளர் தாக்கல் செய்த வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக வேட்பாளர் அன்னை வி.ஜி.சரவணன். இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 2.55 மணிக்கு மேல் ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்வேல் முருகனிடம் தனது வேட்புமனுவை வழங்கினார். அதை தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, மொத்தம் 5 பக்கங்கள் கொண்ட வேட்புமனுவில் 4 பக்கங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பது தெரியவந்தது. வேட்புமனுவில் அப்பகுதியில் வசிப்பவர்களின் வழிமொழிதல், முன்மொழிதல் மற்றும் அவர்களது முழு விவரங்கள் இணைக்கப்பட வேண்டும். அவையும் இணைக்கப்படவில்லை. மேலும், வேட்பு மனுவில் வேட்பாளரின் கையெழுத்து கூட இல்லாதது தெரியவந்தது.
இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி வேட்புமனுவை சரவணனிடமே திருப்பி வழங்கினார். ‘வேட்புமனு மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும். மனுவை பெறுவதற்கு இன்னும் 2 நிமிடங்களே உள்ளதால் அதற்குள் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இல்லையென்றால் திங்கட்கிழமை (இன்று) வந்து மனுதாக்கல் செய்யுங்கள்’ என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
இதனால் தவெக வேட்பாளர் வி.ஜி.சரவணன் மற்றும் நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர். உரிய ஆவணங்களை இணைத்து திங்கட்கிழமை வேட்புமனுத்தாக்கல் செய்வோம் என அவர்கள் கூறினர்.
நேரம் தெரியாததால் குழப்பம்: தவெக வேட்பாளரின் வேட்புமனுவை பூர்த்தி செய்யும் பணி ஸ்ரீவைகுண்டத்தில் நடந்துள்ளது. அப்போது அக்கட்சியை சேர்ந்த ஒருவர் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மெதுவாக பூர்த்தி செய்து கொண்டிருந்துள்ளனர். பின்னர் மாலை 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியவரவே அரைகுறையாக பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுவுடன் அவசர அவசரமாக வந்து அவர்கள் தாக்கல் செய்தது தெரியவந்துள்ளது.
முழுமையாக நிரப்பாத வேட்புமனுவை தாக்கல் செய்த தவெக வேட்பாளர்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space