தற்சமயம் நாடொன்றாக நாம் பல கடுமையான அவதானம் மிக்க நிலைமைகளை எதிர்கொள்கிறோம். மத்திய கிழக்கு போர் நமது நாட்டிற்கு வெளியே நடந்தாலும், அதற்கு நாம் நாடாக பொறுப்பேற்காவிட்டாலும், இந்த போர் நிலவரம் குறித்து முன்கூட்டியே கணித்து முன்னாயத்த ஏற்பாடுகளோடு தயார் நிலையில் இருப்பது அரசாங்கத்தின் முக்கியமான கடமையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
'பொய்கள் போதா குறைக்கு திருட்டும் கூட - அநுர Fail, மக்களுக்கு கஷ்டம் பொருளாதாரம் ஆபத்தில்' என்ற கருப்பொருளில் மொரட்டுவ பிரதேசத்தில் சனிக்கிழமை (29) மாலை இடம்பெற்ற பொது மக்களை தெளிவூட்டும் மக்கள் சந்திப்புத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025 ஜூன் மாதம் முதலே அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கியது. நாட்டை ஆளும்போது உலக நிலவரங்களை ஆராய்ந்து அரசாங்கம் நாடு எதிர்கொள்ளும் அபாய நிலைமைகளை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டும்.
டிரம்பின் கொள்கைகளால் வெனிசுலாவுக்கும் கியூபாவுக்கும் என்ன நடந்தது என்று அரசாங்கம் ஏலவே அவதானத்தோடு இருந்து கவனித்திருந்தால், நமது நாடு இப்போது எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்காது. இந்த விடயங்கள் தொடர்பில் அறியாமல் இருந்ததால் இன்று 220 இலட்சம் மக்களே பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர்.
இவற்றை அறிந்து கணித்து முன்கூட்டிய தயார்நிலையுடன் நாட்டை வழிநடத்தியிருக்க முடியும். எதிர்க்கட்சி இவற்றை சுட்டிக்காட்டும்போது ஆளும் தரப்பு சமூக ஊடகங்கள் மூலம் எம்மீது சேறு வீசியது. இதனையே செய்தது. 2019 மற்றும் 2024 ஆண்டுகளில் பொய்களும் ஏமாற்றுகளுமே வெற்றியீட்டின.
ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதனால் நாட்டிற்கு ஏற்படும் பெரும் பாதிப்புக்களைக் குறைத்துக் கொள்ள அரசாங்கம் எடுத்துள்ள மாற்று நடவடிக்கைள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சரிடம் வினவிய சமயம், இதனால் நமது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாது .
ஆனால் இந்த நீரிணை மூடப்படுவதனால் எண்ணெய், உரம், எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களைப் பெற்றுக் கொள்வதில் பல பாதிப்புகள் ஏற்பட்டன.
பொய்களுக்கு ஆயுட்காலம் குறைவு எனக் கூறி, ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் வைத்து நம்முடைய கடல் போக்குவரத்து குறித்த உடன்படிக்கைகள் காணப்படுவதாக கூறியிருந்தார்.
ஆனால் போர் நீர்மூழ்கிக் கப்பலொன்று எமது பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் வந்து தாக்குதல் நடத்தியது இந்த உடன்படிக்கைகளை மீறும் செயலாகும். இந்த விடயம் குறித்து அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை.
நேற்று போர் நிலவரம் தீவிரமடைந்து, யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் இந்த போரில் இணைந்து ஈரான் சார்பாக இஸ்ரேலை தாக்கினார்கள். இதனால் ஹோர்முஸ் நீரிணைக்கு கீழே உள்ள பாப் அல் மந்தப் நீரிணையும் பாதிக்கப்படும்.
மத்திய தரைக்கடல், அரேபியக் கடல், செங்கடல், இந்தியப் பெருங்கடல் அனைத்தும் இதன் வழியாக இணைவதால், இந்த நீரிணையும் மூடப்படுவதற்கான அபாயம் எழுந்து காணப்படுகின்றன.
இதனால் ஐரோப்பாவுக்கு நாம் ஏற்றுமதி செய்யும் தேயிலை, ஆடை ஏற்றுமதி உள்ளிட்ட அனைத்து ஏற்றுமதிகளும் பாதிக்கும். ஏனைய உலக நாடுகளின் ஏற்றுமதிகளுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். இதுகுறித்து அரசாங்கத்திற்கு எந்த புரிதலும் இல்லை.
நான் ஆடை ஏற்றுமதி செய்யும் ஒருவரல்ல. இலட்சக்கணக்கான மக்களை நினைத்தே இவற்றை சுட்டிக்காட்டுகிறேன். இந்த இரண்டு நீரிணைகளையும் தவிர்க்க வேண்டுமெனில் நன்னம்பிக்கை முனைய பாறைக் குடா (Cape of Good Hope) வழியாகச் செல்ல வேண்டும்.
இதனால் கப்பல் போக்குவரத்தில் 10-15 நாட்கள் மேலதிக காலம் ஆவதால் ஏற்றுமதி போட்டித்திறன் குறைந்து பாதிப்புகள் ஏற்படும். இதனால் பண்டங்களின் விலைகள் அதிகரித்து, பணவீக்கம் அதிகரித்து, மருந்துகளின் விலைகளும் உரங்களின் விலைகளும் அதிகரிப்பதற்கான அவதனாங்கள் காணப்படுகின்றன.
பொருளாதாரத்திற்கு பேரிடியாக அமைந்து, அந்நியச் செலாவணியையும் இழந்து, கையிருப்புகளுக்கும் பாதிப்புகள் ஏற்படலாம். அவ்வாறே, இந்த பிராந்தியத்தில் பணிபுரியும் சுமார் ஒரு மில்லியன் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்.
ரணசிங்க பிரேமதாசாவின் காலத்தில் வடக்கிலும் தெற்கிலும் இரு முனைகளிலும் யுத்தமும் கிளர்ச்சியும் நடந்தன. அவ்வாறே, வளைகுடா போரும் காணப்பட்டன. இருந்தும் நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் சென்றார்.
ஜன சவிய, இலவச சீருடை, பாடசாலை மாணவர்களுக்கான பகல் உணவு, கம் உதாவ ஆகிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தார். வளைகுடா யுத்தம் காரணமாக குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுக்கு அரச தரப்பிலிருந்து இழப்பீடுகளையும் கொடுத்தார்.
தற்போதைய இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்த அரசாங்கத்தால் இவற்றுக்கு சரியாக முகம்கொடுக்க முடியாதுபோயுள்ளன. அரசாங்கம் நிலமைகளை கையாள முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளது. டித்வா சூறாவளிக்குப் பிறகு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியாக நாம் யோசனை முன்வைத்தோம்.
அரசாங்கம் இதனையும் நகைச்சுவையாக பார்த்து எம்மீது சேறு பூசியது. யுத்தம் நடப்பதால் இப்போது அதனைச் செய்ய முடியாது. அரசாங்கம் காலம் தாழ்த்தியமையே இதற்கு காரணமாகும்.
நாட்டு மக்கள் எதிர்பார்ககும் உண்மையான மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே கொண்டு வர முடியும். ஆரோக்கிய துவாய் சுகாதார வசதிகளை பாடசாலை பிள்ளைகளுக்கு மட்டுமல்லாது, நாடு முழுவதும் சகல பெண்களையும் மையமாகக் கொண்டு பெற்றுக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளின்பால் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
பயனுள்ள திட்டமாக இது அமைந்து காணப்படும். உண்மையான மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியால் மாத்திரமே முன்னெடுக்க முடியும்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமது நாடுகள் தொடர்பில் சிந்தித்து செயற்படும் வேளையில், நமது நாட்டிற்கு முறையான மாற்று வேலைத்திட்டமொன்று இன்னும் இல்லை.
இந்தியப் பிரதமர் நேரடியாக ஈரானைத் தொடர்பு கொண்டு எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.
மத்திய கிழக்குப் போரை காரணமாக வைத்து, சகல பண்டங்களிலும் சேவைகளிலும் விலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கம் யோசிக்கின்றது.
இதே அரசாங்கம் தான் தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்தது. அந்த மோசடியையும் அதன் நட்டத்தையும் போரைக் காரணமாக வைத்து மக்கள் மீது சுமத்த முயல்கின்றனர்.
நுரச்சோலை மின்நிலையத்தில் திட்டமிட்ட மின்சார உற்பத்தி இதனால் சாத்தியமற்றுபோயுள்ளது. தரவுகளையும் தகவல்களையும் அடிப்படையாக கொண்டு கொள்கைகளை வகுக்க வேண்டும்.
உரப் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரங்களுக்கு விதிக்கப்பட்ட பெறுமதி சேர் வரியை நீக்க வேண்டும். அவ்வாறே, உர மானியத்தை அதிகரிக்க வேண்டும்.
திறைசேரியில் மேலதிக கையிருப்பில் காணப்படும் பணத்தை பயன்படுத்தி மக்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் வரிச்சுமையை நீக்கி, மக்களுக்கு நிவாரணப் பொதிகளை அறிமுகப்படுத்திக் கொடுக்க வேண்டும்.
மின்சாரம் மற்றும் எரிபொருள் மீதுள்ள வரிச்சுமையை குறைக்க வேண்டும். இது தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் அறிக்கையிலேயே கூறப்பட்டுள்ள விடயாமவும் காணப்படுகின்றன என்றார்.
மத்திய கிழக்கு போர் : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் – சஜித் பிரேமதாச
Ad Space
Ad Space
Ad Space
Ad Space