மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை. பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து எமது கட்சி முன்னோக்கிப் பயணிக்குமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டி, தலதா மாளிகையில் சனிக்கிழமை (04) மத வழிபாடுகளின் ஈடுபட்டதன் பின்னர் ஊகடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும். இதைத் தவிர எமக்குக் கூறுவதற்கு வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை. இது குறித்து மக்களிடமே கேட்டால் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.
யார் வேண்டுமானாலும் எங்களைக் கைது செய்யட்டும், கைது செய்வதற்கு வேறு யாரும் இல்லாததால் எங்களைத்தான் கைத செய்யப் பார்க்கின்றனர். மக்கள் எப்போதும் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை. தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயற்படப் போகின்றேன்.
இனிவரும் தேர்தல்களில் அந்தந்தக் காலகட்டங்களில் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்களோ, அவரையே வேட்பாளராகக் களமிறக்குவோம். மக்கள் கோரிக்கை விடுத்தால், நிச்சயமாக நாமலுக்கு அந்த வாய்ப்பை வழங்குவோம். மக்கள் கோராவிட்டால் அவ்வாறு வழங்க மாட்டோம்.
தற்போதைய ஆட்சியாளர்கள் விவசாயிகளுடன் நெருக்கமாக இல்லை. அவர்கள் விவசாயிகளைப் பற்றி வாய்வார்த்தையாக மட்டுமே பேசுகிறார்களே தவிர, உண்மையில் அவர்களோடு நிற்பதில்லை. அத்துடன், எதிர்காலத்தில் தமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிப்போம் என்றார்.
மக்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே நாமலை வேட்பாளராகக் களமிறக்குவோம் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space