இலங்கை உள்ளடங்கலாக இயற்கை அனர்த்தங்களினால் மிகமோசமாகப் பாதிக்கப்படும் நாடுகளால் பெறப்படும் கடன்கள் அந்நாடுகளின் பெரும்பாகப்பொருளாதாரத்தை மிகமோசமானப் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய நாடுகள் கிளை அமைப்புக்களின் பிரதிநிதிகள், எனவே அவ்வழுத்தங்களைக் குறைப்பதற்கு ஏதுவான பாதுகாப்பு வழிமுறைகளை அறிமுகப்படுத்தவேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
'தித்வா' சூறாவளியை அடுத்து இலங்கைக்கு ஏற்பட்ட தாக்கங்களை அடிப்படையாகக்கொண்டு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அசூஸா குபோட்டா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-ஆன்ரே பிரான்ஞ் ஆகியோரினால் கூட்டாக எழுதி வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட 'தித்வா' சூறாவளியை அடுத்துப் பெய்த கனமழை மற்றும் மண்சரிவு என்பன இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை நீரில் மூழ்கடித்ததுடன் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியது. குறிப்பாக இது ஏற்கனவே நலிவுற்ற - விரைவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்த மக்களையே வெகுவாகப் பாதித்துள்ளது. ஏற்கனவே பலவீனமான நிதி நிலைமையைக் கொண்டிருந்த இலங்கை, இதன் விளைவாக சுமார் 6 - 7 பில்லியன் டொலர் இழப்பை எதிர்கொண்டிருக்கிறது.
இலங்கையின் இந்த நிலைவரம் குறிப்பிட்டுக்கூறத்தக்க ஒரு உதாரணம் என்றாலும், அது ஒரு தனித்த நிகழ்வு அல்ல. மாறாக உலகம் முழுவதும், குறிப்பாக இந்தோனேசியா, வியட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் மற்றும் மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்ததுடன் அவற்றில் 3000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதுமாத்திரமன்றி இவ்வனர்த்தங்கள் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த பல மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதித்துள்ளன.
உலக பொருளாதாரத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இந்த அனர்த்தங்கள், ஏற்கனவே ஈட்டப்பட்ட முன்னேற்றங்களைத் தலைகீழாக்குவதுடன் அதன் நீட்சியாகப் பல அடுக்கு நெருக்கடிகளைத் தோற்றுவிக்கின்றன. அந்நெருக்கடிகளில் குறிப்பிட்டுக்கூறத்தக்கது கடனன் சுமையாகும். இது அரசாங்கங்களுக்கு மாத்திரமன்றி தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கும் பொருந்தும்.
அரசாங்கத்தினால் பெறப்படும் கடன்கள் பெரும்பாகப்பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சந்தை நம்பிக்கையைப் பாதிக்கின்றன. அதேபோன்று வணிகக்கடன்கள் வேலைவாய்ப்பு மற்றும் அரச வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அத்தோடு வீட்டுக்கடன்கள் வறுமையையும் சமூக ரீதியிலான எதிர்மறைத் தாக்கங்களையும் அதிகரிக்கின்றன.
அதற்கான தீர்வாகவே 'அபிவிருத்திக்கு நிதியளிப்பதற்கான செவில்லா உடன்படிக்கை' தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இதனூடாக காலநிலை மீள்திறன்கொண்ட கடன் உட்பிரிவுகளை நடைமுறைப்படுத்தமுடியும். அதனூடாக பேரனர்த்தங்கள் ஏற்படும்போது கடன் மீள்செலுத்துகை கடப்பாடு தானாகவே ஒத்திவைக்கப்படும்.
அதேவேளை இறையாண்மை கடன்களிலும் பேரனர்த்தக்காலங்களில் கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாகப் பிற்போடுவதற்கான அம்சங்கள், வணிகங்களுக்கான ஒருங்கிணைந்த அபாய மதிப்பீடு மற்றும் அளவீட்டு அடிப்படையிலான காப்பீடுகள், குடும்பங்கள் மீதான அழுத்தங்களைத் தாங்கக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகள் என்பன இன்றியமையாதவையாகும்.
பேரனர்த்தங்களை அடுத்துப் பெறப்படும் கடன்களால் இலங்கையின் பெரும்பாகப்பொருளாதாரம் வெகுவாகப் பாதிப்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space