நாட்டின் எதிர்கால நலன் கருதி, ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் கனிந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சரும், நாட்டின் சிறந்த அரசியல் ஆளுமையுமான மறைந்த காமினி திசாநாயக்கவின் 84ஆவது ஜனன தின நிகழ்வு நேற்று (20) மாலை கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
தவறான அரசியல் முடிவுகளால் 220 இலட்சம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ள இத்தருணத்தில், இடதுசாரி அல்லது வலதுசாரி என்ற பேதமின்றி மக்கள் நலன் காக்கும் முகாமை வலுப்படுத்த வேண்டும். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்து அடித்தளம் இடும்.
தனது அரசியல் பயணத்தின் ஆரம்பகர்த்தா காமினி திசாநாயக்கவே என அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். ரணசிங்க பிரேமதாசவின் மறைவிற்குப் பின்னர், குடும்ப அரசியலை விடுத்துத் தன்னை அரசியலுக்கு அழைத்து வந்து ஹம்பாந்தோட்டை மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கியவர் காமினி திசாநாயக்கவே என்றார்.
தீவிர தாராளவாதம் மற்றும் தீவிர கம்யூனிசம் ஆகிய இரண்டையும் நிராகரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், 'மனிதாபிமான முதலாளித்துவம்' மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்ட மூன்றாவது பாதையே இலங்கைக்குத் தேவையானது.
30 வருட மகாவலி திட்டத்தை 06 வருடங்களில் முடித்த சவால், ஸ்வர்ணபூமி காணி உறுதித் திட்டம் மற்றும் இலங்கைக்கு டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தைப் பெற்றுத் தந்த இராஜதந்திரப் பணி என காமினி திசாநாயக்கவின் சாதனைகளை அவர் சுட்டிக்காட்டினார்.
மக்களின் ஆணையையும் நம்பிக்கையையும் பணத்திற்காக விற்கும் அரசியல் காலம் முடிந்துவிட்டதாகத் தெரிவித்த சஜித் பிரேமதாச, இன, மத நல்லிணக்கத்துடன் கூடிய சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய அரசியல் பயணத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையத் தயார்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space