புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும். ஆனால் அதற்கான காலவரைபு பற்றி இதுவரை எவ்வித பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை. வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களுக்கு அரசியலமைப்பு சார்ந்த உரிமைகளை பெற்றுக்கொடுப்போம் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
30 வருடகால யுத்தம் முடிவடைந்தாலும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இன்றளவில் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் தான் வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் இன்றும் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகள் விடுவிக்கப்படும். ஜனாதிபதி அநுரகுமார ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருட காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளன. வீதிகள் திறக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் காணிகளை பொதுமக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம்.தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டு காணிகளை விடுவிக்க முடியாவிடின் அந்த காணிகளுக்கு சொந்தமானவர்களுக்கு மாற்று காணிகளோ அல்லது இழப்பீடோ வழங்கப்படும். அதற்குரிய நடவடிக்கைகள் உரிய அமைச்சுக்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன.
மலையக மக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து தீவிர கரிசணை கொண்டுள்ளோம். சம்பள அதிகரிப்பின் ஊடாக மாத்திரம் அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியாது. வீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அந்த மக்களுக்கு வழங்க விசேட பொறிமுறைத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
தற்போதைய அரசியலமைப்பு மற்றும் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் நல்லதொரு அபிப்ராயம் மக்கள் மத்தியில் கிடையாது. நாட்டுக்கு பொருத்தமான வகையில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவோம் என்று மக்களுக்கு வாக்குறுதியளித்தோம்.
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது விரிவானதொரு செயற்பாடாகும். புதிய யாப்புருவாக்கத்துக்குரிய கால வரைபு பற்றி அமைச்சரவையில் எவ்வித தீர்மானமும் இதுவரையில் எடுக்கவில்லை என்றார்.
புதிய அரசியலமைப்பு நிச்சயம் உருவாக்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன
Ad Space
Ad Space
Ad Space
Ad Space