தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியியற் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து, நீண்டகாலமாக மிகவும் சூட்சுமமான முறையில் 'ஐஸ்' போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த தம்பதிகள் உட்பட மூவரைச் சம்மாந்துறை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப் பகுதி ஒன்றில், சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி என்.றிபாய்டீனுக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றிற்கமைய, ஞாயிற்றுக்கிழமை (07) மாலை இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட தம்பதிகள் 34 மற்றும் 42 வயதுடையவர்கள் என்பதுடன், நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளம் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்டவர்களாவர். இவர்கள் கடந்த 6 மாத காலமாகச் சம்மாந்துறை 40 வீட்டுத்திட்டப் பகுதியில் தோட்டவேலை செய்வதாகக் கூறிக்கொண்டு, தங்கி இருந்து 'ஐஸ்' போதைப்பொருளை விநியோகித்து வந்துள்ளனர்.
அத்துடன், கடந்த 3 மாதங்களாக அட்டப்பளம் பகுதியில் வீடு ஒன்றினை வாடகைக்குப் பெற்று, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விக் கல்லூரி மாணவர்களை இலக்கு வைத்து இந்த வியாபாரத்தை நடத்தியுள்ளனர்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து தனியார் வங்கி கணக்கொன்றின் ஊடாக தலா 10,000 முதல் 12,000 ரூபா வரையிலான பணத்தை இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளனர்.
வங்கியில் பணம் வைப்பிலிடப்பட்டதும், அது குறித்த விபரங்கள் தம்பதியரின் கைத்தொலைபேசிக்குக் குறுஞ்செய்தியாக வந்துவிடும். அவ்வாறு செய்தி வந்தவுடன், சம்பந்தப்பட்ட நபருக்குப் போதைப்பொருள் உடனடியாக விநியோகிக்கப்பட்டுள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சுற்றிவளைப்பின் போது, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்த தம்பதியினரிடமிருந்து 12,000 ரூபா செலவில் 'ஐஸ்' போதைப்பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு வந்திருந்த போதே கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து 2 கிராம் 220 மில்லிகிராம், 500 மில்லிகிராம் மற்றும் 750 மில்லிகிராம் எடையுடைய ஐஸ் போதைப்பொருள் துண்டுகள், 2 மோட்டார் சைக்கிள்கள், கைத்தொலைபேசிகள், வங்கிப் புத்தகங்கள் மற்றும் பணம் செலுத்தியதற்கான வங்கிச் சீட்டுகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் சட்ட நடவடிக்கைகளுக்காகச் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது வழக்கை விசாரித்த நீதவான், போதைப்பொருள் வாங்க வந்த பல்கலைக்கழக மாணவனுக்கும், விற்பனை செய்த கணவனுக்கும் தலா 9,000 ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். எனினும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய தம்பதிப் பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கினை மறுதவணைக்கு ஒத்திவைத்தார்.
இவ்விசேட சோதனையானது, கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரிஆராச்சி மற்றும் கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆகியோரின் நேரடி வழிகாட்டலில், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனையின் பேரில், ஊழல் ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என்.றிபாய்டீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து ‘ஐஸ்’ விநியோகம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space