ஈரானில் பெண்களின் உரிமைக்காகவும், மரண தண்டனைக்கு எதிராகவும் மூன்று தசாப்தங்களாகப் போராடி வரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற 53 வயதுடைய நர்கீஸ் முகமதிக்கு அந்நாட்டு நீதிமன்றம் மேலும் 7.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஏற்கனவே சிறையில் இருக்கும் நர்கீஸ் முகமதி மீது சுமத்தப்பட்ட புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேசிய பாதுகாப்புக்கு எதிராக சதி செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு 06 ஆண்டுகளும், அரசுக்கு எதிரான பிரச்சாரம் செய்தார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஒன்றரை ஆண்டுமாக 07 அரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்த பின்னர், 02 ஆண்டுகள் உள்நாட்டு நாடுகடத்தல் (Internal Exile - குஸ்ஃப் நகரில் வசிக்க வேண்டும்) மற்றும் 02 ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி, மஷாத் நகரில் மர்மமான முறையில் உயிரிழந்த சட்டதரணி கோஸ்ரோ அலிகோர்டியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நர்கீஸ் கலந்து கொண்டார். அப்போது அவர் ஆற்றிய உரை, "அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாகவும்", "அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பத் தூண்டியதாகவும்" கூறி அவர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
சிறையில் தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக நர்கீஸ் கடந்த ஒரு வாரமாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமை அவரது சட்டதரணி முஸ்தபா நிலியுடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக 'நர்கீஸ் அறக்கட்டளை' தெரிவித்துள்ளது.
"பல வாரங்களாகத் தனிச் சிறையில் வைக்கப்பட்டிருந்த அவர், தற்போதுதான் தனது சட்டதரணியிடம் பேச அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரானிய நீதித்துறையின் இந்த அடக்குமுறை சர்வதேச விதிகளை மீறுவதாகும்." என அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
2023-ஆம் ஆண்டு சிறையில் இருக்கும்போதே இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஈரான் அரசு தற்போது அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள சூழலில், உள்நாட்டில் போராட்டக் குரல்களை ஒடுக்க இத்தகைய கடும் தண்டனைகளை வழங்கி வருவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பையும் சேர்த்து, நர்கீஸ் முகமதிக்கு விதிக்கப்பட்ட மொத்த சிறைக்காலம் சுமார் 44 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கைக்கு ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
நோபல் பரிசு பெற்ற ஈரான் பெண்ணுக்கு மேலும் 07 ஆண்டுகள் சிறை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space