இலங்கையின் பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பது குறித்து தற்போதைய அரசியல் மற்றும் சட்டக் களத்தில் பெரும் விவாதங்கள் எழுந்துள்ளன. அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு எதிராக பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள இலங்கை நீதித்துறை சேவைகள் சங்கத்தின் பொதுக் கூட்டத்தின் மீது தற்போது அரசாங்கம் உட்பட பலருடைய கவனமும் குவிந்துள்ளது.
நீதிமன்றக் கட்டமைப்பில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய மற்றும் செல்வாக்குமிக்க அமைப்பாகக் கருதப்படும் இந்தச் சங்கத்தின் நிலைப்பாடு, இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இலங்கை நீதித்துறை சேவைகள் சங்கத்தின் பொதுக் கூட்டம் இவ்வளவு முக்கியத்துவம் பெறுவதற்குக் காரணம் அதன் உறுப்பினர்களின் பின்னணி ஆகும். இச்சங்கத்தில் நாட்டின் முக்கிய நீதித்துறை அதிகாரிகள், மாவட்ட நீதிபதிகள், நீதவான்கள் மற்றும் பிற கீழ் நீதிமன்ற நீதிபதிகள் என நீதித்துறையின் அடிமட்டக் கட்டமைப்பிலிருந்து மேல்மட்டம் வரை இயங்கும் பெரும்பான்மையான அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால், ஒட்டுமொத்த நீதித்துறை சமூகத்தின் குரலாக இச்சங்கத்தின் பொதுக் கூட்டத் தீர்மானங்கள் பார்க்கப்படுகின்றன.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு ஏற்கனவே இலங்கையின் முக்கிய சட்ட அமைப்புகள் தங்களது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக, இலங்கை சட்டத்தரிகள் சங்கம் மற்றும் ஆசிய சட்டத்தரணிகள் சங்கம் உட்பட பல அமைப்புகள் இந்த வயதெல்லை நீட்டிப்புத் திட்டத்தை ஏற்க முடியாது என ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்துள்ளன.
இத்தகையதொரு பரபரப்பான சூழலில், ஒட்டுமொத்த நீதித்துறை அதிகாரிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை நீதித்துறை சேவைகள் சங்கம், இந்த ஓய்வு வயது நீட்டிப்பு விவகாரத்தில் தனது இறுதி நிலைப்பாட்டை இந்த 18ஆம் திகதி பொதுக் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது.
நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்பு: இலங்கை நீதித்துறை சேவைகள் சங்கத்தின் பொதுக் கூட்டம் மீது அரசாங்கம் அதீத கவனம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space