நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உடனடியாக அதிகரிக்கும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தைக் கொண்டுவர அரசாங்கம் முயற்சிப்பதானது சர்வாதிகாரத்தை நோக்கிய ஏதேனும் ஒரு மறைமுக திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறதா என்ற நியாயமான சந்தேகத்தை தோற்றுவிப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா குற்றம் சாட்டினார்.
கொழும்பில் சனிக்கிழமை (25) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசாங்கத்தின் அவசர முயற்சிக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள நிலைப்பாடானது அச்சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரியவின் தனிப்பட்ட அரசியல் தேவைக்காக எடுக்கப்பட்ட முடிவாகும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு பின்னால் மறைந்துகொண்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளமை எனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டத்தரணிகள் சங்கம் என்பது அதன் தலைவரின் தனிப்பட்ட சொத்து அல்ல. அது பெருமளவிலான தொழில்சார் வல்லுநர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பாகும்.
நாட்டின் பெரும்பான்மையான சட்டத்தரணிகளின் எதிர்ப்புக் குரலையே தலைவர் ரஜீவ் அமரசூரிய சங்கத்தின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
அரசாங்கம் தீர்க்க வேண்டிய பல பிரச்சினைகள் நாட்டில் நிலவி வரும் சூழலில், வரும் நவம்பர் மாதத்துக்குள் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாக நிறைவேற்ற முயல்வது ஒரு சர்வாதிகார ஆட்சியை அமைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே தோன்றுகிறது.
இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம், சட்ட வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த தரப்பினருடன் முறையான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, விரிவான ஆய்வுக்குப் பின்னரே தீர்மானிக்கப்பட வேண்டும்.
பாராளுமன்ற சிறப்புரிமைகளின் பாதுகாப்பைப் பயன்படுத்தி இவ்வாறான பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதை குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
தவறைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தி அவர்களின் வாயை மூடுவதையே இந்த அரசாங்கம் தனது வழக்கமான பாணியாகக் கொண்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் தான் வெளியிட்ட அறிக்கை சரியானது என நம்பினால், பாராளுமன்ற சிறப்புரிமைகளுக்கு வெளியே வந்து ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக அதனை மீண்டும் கூறட்டும்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக இத்துறையில் உள்ளவன் என்ற முறையில், தலைவர் ரஜீவ் அமரசூரிய சட்டத்தரணிகளின் பொதுவான கருத்தின் படியே செயல்படுகிறாரே தவிர, தனது சுயநலத்துக்காக அல்ல என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் அரசின் முயற்சி சர்வாதிகாரத்துக்கான மறைமுக திட்டமா?
Ad Space
Ad Space
Ad Space
Ad Space