நாட்டில் நீதித்துறை அமைப்பை ஒரு நியாயமான நீதி வழங்கல் கட்டமைப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அத்தியாவசிய தேவை நிலவுகின்ற போதிலும், தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பிலும் சட்டத்திலும் செய்ய வேண்டிய அத்தியாவசிய சீர்திருத்தங்களைச் செய்யாமல் தன்னிச்சையாகச் செயற்பட்டு வருவதாக மாற்றத்திற்கான இளைஞர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெலிமடை பகுதியில் அமைப்பை கட்டியெழுப்பும் இளைஞர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்து மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் வேண்டிய அத்தியாவசியத் தேவைகள் உள்ளன. ஆனால், அத்தகைய எந்தவொரு ஜனநாயக சீர்திருத்தங்களையும் செய்யாமல், பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்தத் தீர்மானமானது சட்டத்தரணிகள் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் சட்டக் குழுக்களில் உள்ள சட்ட வல்லுநர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். துறை சார்ந்த தொழில்வல்லுநர்களின் எதிர்ப்பையும் மீறி, அரசாங்கம் தங்களது குறுகிய அரசியல் தேவைகளுக்காகவே இதனைப் பலவந்தமாகச் செய்ய முனைகின்றது.
ஜனநாயகப்பூர்வமாக நிறுவப்படாத ஒரு கட்டமைப்பின் மூலம் உண்மையான நீதி நிலைநாட்டப்பட மாட்டாது. அரசாங்கத்தின் இத்தகைய தன்னிச்சையான மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளாலேயே, நலிவடைந்திருந்த ஊழல்மிக்க எதிர்க்கட்சி மீண்டும் தலைதூக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. எனவே, இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட்டு, அரசியலமைப்பு மற்றும் சட்டத்தில் உண்மையான சீர்திருத்தங்களை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
நீதித்துறை சீர்திருத்தங்களை புறக்கணித்து அரசாங்கம் தன்னிச்சையாக செயற்படுகிறது
Ad Space
Ad Space
Ad Space
Ad Space