நீட் தேர்வுக்கு வழிகாட்டு நெறிமுறை வகுக்க கோரிய வழக்கு தள்ளுபடி
Ad Space
Ad Space
: நீட் தேர்வை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வுக்கு முன்னதாகவே வினாத்தாள் கசிந்தது தெரியவந்ததால், தேர்வை ரத்து செய்த தேசிய தேர்வு முகமை ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்தும் வகையில் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. “நீட் தேர்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் கடந்த 2024-ம் ஆண்டே மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது வினாத்தாள் கசிந்தது தொடர்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உத்தரவிட்டு விசாரணையை ஜூலைக்கு தள்ளிவைத்துள்ளது” என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Ad Space
Ad Space