சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டதாக புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை சமர்க்க தவறினால் இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகை கிடைக்காமல்போகும் அபாயம் இருக்கிறது. அதேநேரம் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கவேண்டாம் என சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டோம் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (22) கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்தின் கொழும்பு அலுவலகப் பொறுப்பதிகாரிகளை நாங்கள் கடந்த வாரம் சந்தித்தோம். எரிபொருள் தொடர்பாக எமது நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணங்களை குறைக்கவோ அல்லது முற்றாக நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொண்டோம். அவ்வாறு செய்தால், வாழ்க்கைச் செலவு தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிடும் என்பதையும் நாங்கள் அவர்களுக்குத் தெரிவித்தோம்.
நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் மிகவும் பிரயோசனமான கலந்துரையாடலை மேற்கொண்டோம். அந்தக் கலந்துரையாடலுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் நாட்டிற்கு வருகை தந்தனர்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முடிவடைகிறது. அந்நியச் செலாவணியைப் பெறுவதில் இன்று பாரதூரமான சிக்கல் உள்ளது. சுற்றுலாத்துறையிலிருந்து எமக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி மே மாதத்தில் மட்டும் ஐந்து சதவீதத்தால் குறைந்துள்ளது. இலங்கையின் தொழிலாளர்கள் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் நாட்டிற்கு அனுப்பும் டொலர் வருமானம் பெருமளவில் குறைந்துள்ளது.
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுவர்கள், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இந்த நிலையிலேயே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தினால், நாம் கைச்சாத்திட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளின் சரத்துக்கள் அப்பட்டமாக மீறப்படுவதாக நீண்ட காலமாகத் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு நடந்தால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முடியாமல் போகும். எனவே, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பொருத்தமான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போது இருப்பது மிகப்பழைமையான சட்டமாகும்.
புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதாக, நான் வெளிவிவகார அமைச்சராக இருந்தபோது ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் எழுத்துமூல வாக்குறுதி வழங்கியிருந்தேன்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் தற்போதைய நீதி அமைச்சர் புதிய சட்டம் ஒன்றைச் சமர்ப்பித்தார். அதற்கு எல்லாத் தரப்பிலிருந்தும் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அந்த முன்மொழியப்பட்ட சட்டமானது, பழைய சட்டத்தை விடவும் பாதகமானது என்று அந்த விமர்சனங்களில் கூறப்பட்டிருந்தது. இது சட்டத்தரணிகள், சிவில் சமூகம் மற்றும் தொழில் வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஒரு சட்டம் என்பதைச் சொல்ல வேண்டும். இந்தச் சட்டத்தை இந்த நிலையில் சட்டமாக்க முடியாது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. அதற்கமைய, வேறொரு சட்டத்தைத் தயாரிப்பதாக அரசாங்கம் கூறியது.
அடுத்த இரண்டு மாதங்களுக்குள் புதிய சட்டத்தைச் சமர்ப்பிப்பதாக நீதி அமைச்சர் கிளிநொச்சிக்கு சென்று கூறினார். அந்தப் புதிய சட்டத்தின் உள்ளடக்கம் என்னவென்று எவருக்கும் தெரியாது. சமூகத்துடன் பரந்த அளவில் கலந்துரையாடாமல் சமர்ப்பிக்கப்பட்டதால், ஆறு மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட சட்டம் முற்றாகத் தோல்வியடைந்தது. அதனால் அனைவரது கருத்துக்களாலும் செழுமைப்படுத்தப்பட்ட, சர்வதேச சட்டங்களுக்கு இணங்கக்கூடிய சட்டம் ஒன்று அவசியமாகும். இந்தச் சட்டத்தை சரியாகச் சமர்ப்பிக்காவிட்டால், ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைகள் ஆபத்துக்குள்ளாகும். அவ்வாறு நடந்தால், இந்த நேரத்தில் இலங்கை பொருளாதாரத்தினால் தாங்கிக்கொள்ள முடியாத இழப்பு ஏற்படும் என்றார்.
நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசுக்கு ஆலோசனை வழங்கவேண்டாம் என நாணய நிதியத்தை கோரினோம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space