அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் நன்மையடைந்து வரும் குடும்பங்களில் மாற்று வழிகள் மூலம் தற்போது நிலையான வருமானத்தை பெற்று வரும் சுமார் 1 இலட்சம் குடும்பங்களை அத்திட்டத்திலிருந்து விடுவிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு நிலையான வருமானத்தை ஈட்டத் தொடங்கியுள்ள பயனாளிகளை அவசரப்பட்டு நீக்காமல் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நலன்புரி கொடுப்பனவுகளிலிருந்து விடுவிப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என்று கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் நீண்டகாலமாக அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளில் மட்டும் தங்கியிருப்பதை தவிர்த்து அவர்களைத் தற்சார்பு பொருளாதார நிலைக்கு இட்டுச் செல்வதே இதன் பிரதான நோக்கமாகும். சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொடுப்பனவுகளை நிறுத்த வேண்டிய காலக்கெடு இருந்தபோதிலும் பல குடும்பங்களின் வருமானம் இன்னும் போதுமான அளவு உயரவில்லை என்பதால் உடனடியாக இந்த நிறுத்தத்தை மேற்கொள்ள முடியாது.
தற்போது முன்னேற்றம் கண்டுள்ள 1 இலட்சம் குடும்பங்களும் சுயதொழில் நடவடிக்கைகள் நிதி உதவிகள் தொழில் பயிற்சி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் போன்ற பல்வேறு வழிகளின் மூலம் தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். 2023ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அஸ்வெசும திட்டமானது வறுமை நிலையின் அடிப்படையில் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு 2,500 ரூபா முதல் 15,000 ரூபா வரை கொடுப்பனவுகளை வழங்கி வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் 2025 மே மாத வரவு - செலவுத் திட்டத்தினூடாக இந்தக் கொடுப்பனவுகளில் சில அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டமானது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டாலும் தகுதியுள்ள பல ஏழைக் குடும்பங்கள் இன்னும் அஸ்வெசும பட்டியலில் சேர்க்கப்படாமை மற்றும் தகுதியற்ற சிலர் உள்வாங்கப்பட்டுள்ளமை போன்ற சவால்கள் நீடிக்கின்றன.
அத்துடன் பயனாளிகள் தமக்கு வழங்கப்படும் உதவித்தொகையை வாழ்வாதார மேம்பாட்டிற்குப் பயன்படுத்தாமல் அத்தியாவசியமற்ற விடயங்களுக்கு செலவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் கிடைக்கின்றன. எவ்வாறாயினும் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு முதல் 2029 வரையான காலப்பகுதிக்குள் அதிகளவான குடும்பங்களைச் சொந்த காலில் நிற்க வைப்பதன் மூலம் நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்வதே அரசாங்கத்தின் இறுதி இலக்காகக் காணப்படுகிறது என்றார்.
நிலையான வருமானம் பெறும் பயனாளிகளை அஸ்வெசும திட்டத்திலிருந்து விடுவிக்க அரசு திட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space