தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவில் அமைச்சர் மாத்திரம் தவறு செய்யவில்லை, ஒட்டுமொத்த அரசாங்கமும் அமைச்சரவையுமே தவறு செய்துள்ளது. அதனால் இந்நாட்டின் சட்டம், பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இருக்கும் கடப்பாடுகளுக்கு மதிப்பளித்து, முழு அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் வியாழக்கிழமை (23) கூட்டு எதிர்க்கட்சி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு மோசடியில் அமைச்சரை மாத்திரம் பலிகொடுத்துவிட்டு, அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது. இது ஒரு மிகப்பெரிய மோசடித் திட்டமாகும். இவற்றில் எதனையும் தனித்துச் செய்வதற்கு அமைச்சருக்குத் திறமையோ அல்லது அதிகாரமோ இருக்கவில்லை. இவை அனைத்திற்கும் அரசாங்கத்தின் முழுமையான பங்களிப்பு இருந்தது.
அரசாங்கத்தின் பூரண பங்கேற்பின் காரணமாகவே, இந்த பாரிய மோசடியை படிப்படியாக முன்னெடுத்துச் செல்ல முடிந்தது. இவற்றை அமைச்சரால் தனித்துச் செய்திருக்கவே முடியாது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிறுவனம் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல. கடந்த காலங்களில் நிலக்கரி விநியோகம் தொடர்பாக எவ்வித அனுபவமும் அந்த நிறுவனத்திற்கு இருக்கவில்லை. இவ்வாறானதொரு நிறுவனத்தைத் தெரிவு செய்து, இவ்வளவு பெரிய ஒப்பந்தத்தை வழங்கியதன் பொறுப்பை அமைச்சரின் மீது மட்டும் சுமத்துவது எந்த வகையிலும் நியாயமற்றது. முழு அரசாங்கமும் ஒன்றிணைந்து, அனுமதி வழங்கி, ஒரு கூட்டு வேலைத்திட்டமாகவே இதனைச் செய்திருக்கிறது..
மிக முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் போது அதற்கு சட்டமா அதிபரின் எந்தவொரு அனுமதியும் கிடைத்திருக்கவில்லை. இந்நாட்டு மக்களின் பணத்துடன் நேரடியாகத் தொடர்புடைய இந்தப் பாரிய கொடுக்கல் வாங்கலில், சட்டமா அதிபரின் அறிவுறுத்தல் அல்லது அனுமதியின்றி அரசாங்கம் இறங்கியது. இதனை அமைச்சரால் தனித்துச் செய்ய முடியுமா? இதற்காக அரசாங்கத்தின் முழுமையான ஆதரவு அமைச்சருக்கு இருந்தது. அந்தப் பலத்தைப் பயன்படுத்தியே அமைச்சர் இதனைச் செய்தார்.
அத்துடன் நிலக்கரியின் தர பரிசோதனைக்கு என ஒரு ஆய்வுகூடம் உள்ளது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஆய்வுகூடத்திற்கு அது தொடர்பாக எந்தவொரு தகுதியும் இருக்கவில்லை. அந்த ஆய்வுகூடம் வழங்கிய சான்றிதழ் ஒரு சதம் கூடப் பெறுமதியற்றது. அப்படியென்றால், அந்த வேலைத்திட்டம் சரியானது என அனுமதித்துவிட்டு, அதன் முழுப் பொறுப்பையும் தற்போது அமைச்சரின் மீது சுமத்த முடியுமா? அதனால் இதன் பொறுப்பை அமைச்சர் மட்டுமல்ல, முழு அரசாங்கமும் கூட்டாகப் பொறுப்பேற்க வேண்டும்
அத்துடன் அரசாங்கம் கொண்டுவந்த 12 கப்பல்களில் இருந்த நிலக்கரிகளும் தரம் குறைந்ததாகும். ஏற்கனவே இருந்த ஒப்பந்த்திற்கு அமைய அந்த தரம்குறைந்த நிலக்கரி கப்பல்களை முழுமையக நிராகரிக்க முடியுமாகி இருந்தது. கொண்டுவந்திருப்பது வாக்குறுதியளித்த தரம் கூடிய நிலக்கரி அல்ல. அதனால் ஒப்பந்தம் முற்றாக மீறப்பட்டிருக்கிறது. நிலக்கரியை நிராகரிப்பதற்கான பூரண உரிமை அரசாங்கத்துக்கும் இருந்தபோதும் அரசாங்கம் வேண்டுமென்றே அதனை செய்யவில்லை.
இது முற்றாக அமைச்சரின் பொறுப்புக்கு கீழ் இருக்கிறன விடயமா? அவ்வாறு இல்லைை. இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எடு்த்துப்பார்த்தால், இதற்கு அமைச்சருக்கு மாத்திரம் பொறுப்புக்களை சுமத்தி அரசாங்கத்தில் இருக்கும் ஏனைய அனைவரும் நல்லவர்களாகி தங்களின் கைகளை கழுவிக்கொள்ள முடியுமா?
உண்மையில் இதனை ஆய்வு செய்து பார்த்தால், . அமைச்சர் தனது பொதுப் பொறுப்பின் அடிப்படையில் இந்தத் தீர்மானங்களை எடுத்து, இந்த மாபெரும் மோசடியில் பங்காளியாகியுள்ளார். இந்த மோசடியானது, மத்திய வங்கி பிணைமுறி மோசடி அளவை விட மூன்று மடங்குக்கும் அதிகமானதாகும். இவ்வாறானதொரு பாரிய மோசடியைச் செய்வதற்குத் திட்டமிட்டு, பெரியதொரு வரைபை உருவாக்கி இதில் இறங்கியது அமைச்சர் மாத்திரம் அல்ல; அமைச்சர் வெறும் கருவி மாத்திரமே. ஒட்டுமொத்த அரசாங்கமும் இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.
அமைச்சரிடம் முழுப் பொறுப்பையும் ஒப்படைத்துவிட்டு, மற்றவர்கள் பொறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒருபோதும் முடியாது. இதன் பொறுப்பு முழு அமைச்சரவையையும் சாரும். இலங்கையின் அரசியலமைப்பில் உள்ள ஒரு அடிப்படைத் தத்துவம் தான், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு. அதுமட்டுமல்லாமல், உயர் நீதிமன்றத்தின் வலுவான தீர்ப்பு ஒன்றும் உள்ளது. அந்தத் தீர்ப்பின் அடிப்படை பொது மக்கள் நம்பிக்கை என்பதாகும்.
எனவே, அமைச்சர் பதவி விலகுவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்பதை நாம் மிகத் தெளிவாகக் கூறுகிறோம். அது இதன் முடிவல்ல. இது எவ்வகையிலும் முடிவடையப்போவதில்லை. முழு அமைச்சரவையும் இதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகும் போதே இது முடிவுக்கு வரும். அதனால் இந்த மாபெரும் மோசடியின் பொறுப்பை முழு அமைச்சரவையும் ஏற்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். தற்போது அமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார். அதனால்தான் அவர் பதவி விலகினார். அமைச்சர் மாத்திரம் தவறு செய்யவில்லை, ஒட்டுமொத்த அரசாங்கமும், ஒட்டுமொத்த அமைச்சரவையுமே தவறு செய்துள்ளது.
எனவே, இந்நாட்டின் சட்டம், பாரம்பரியம் மற்றும் மக்களுக்கு இருக்கும் கடப்பாடுகளுக்கு மதிப்பளித்து, முழு அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அது செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். அவ்வாறு செய்யப்படாவிட்டால், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது எதிர்கால அரசாங்கம் ஒன்றின் கடமையாகும் என்றார்.
நிலக்கரி ஊழல்: முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும் - பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space