பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்கரிய "கிரிஷ்" திட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
வெளிநாட்டு சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுப்பதற்காக நீதிச் சேவை ஆணைக்குழுவின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இந்த அழைப்பாணைகளை அனுப்புமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
குறித்த இரண்டு இந்திய சாட்சிகளையும் தம்மால் தொடர்பு கொள்ள முடியவில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்ததைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டு சாட்சிகளுக்கான நிறுவப்பட்ட சட்டப் நடைமுறைகளுக்கு இணங்க அழைப்பாணைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நதீ அபர்ணா சுவந்துருகொட அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் றக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் "கிரிஷ்" நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டதன் மூலம், நாமல் ராஜபக்ஷ பணச் சுத்திகரிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்துள்ளதாகக் கூறி சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் ஆரம்பகட்ட விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், வழக்கை ஜூலை 07ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space