தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்துக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.
அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு, மீண்டும் 21 ஆம் திருத்தத்தின் ஊடாக நிறுவப்பட்ட, தலைவர் உள்ளடங்கலாக எண்மர் அடங்கிய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிகளுக்கான இரண்டு வெற்றிடங்கள் நிலவுகின்றன.
அவ்வெற்றிடங்களில் ஒன்றுக்கு யாழ் மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதியும், புனர்வாழ்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) தர்ஷன ஹெட்டியாராச்சியின் பெயர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பிரேரிக்கப்பட்டு, அரசியலமைப்புப்பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை நியமிப்பது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அரசியலமைப்புப்பேரவையில் ஆராயப்பட்டதாகவும், அதற்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் (எத்தனை பேர் என்பது பற்றி அறியமுடியவில்லை) தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகின்றது. பேரவையில் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி டில்ருக்ஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி டினேஷா சமரரத்ன ஆகிய மூவர் அங்கம் வகிக்கின்றனர்.
அதனைத்தொடர்ந்து பேரவையின் தலைவர் சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவினால் ஏனைய உறுப்பினர்களிடம் அபிப்பிராயம் கோரப்பட்டபோது பிரதமர் ஹரினி அமரசூரிய, ஆளுந்தரப்பின் பிரதிநிதி பிமல் ரத்நாயக்க, ஜனாதிபதியின் பிரதிநிதி அபூபக்கர் ஆதம்பாவா, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரது பிரதிநிதி அஜித் பி.பெரேரா மற்றும் சிறுகட்சிகளின் பிரதிநிதி எஸ்.சிறிதரன் ஆகியோர் அதற்கு ஆட்சேபனை வெளியிடாததை அடுத்து, அந்நியமனம் வாக்கெடுப்பின்றி உறுதிசெய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை நியமிக்க முஸ்தீபு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space