தென் கொரியாவின் புதிய பிரதமராக, நாட்டின் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களின் அமைச்சரான ஹான் சியோங்-சுக் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி செயலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் பட்சத்தில், கடந்த 20 ஆண்டுகளில் தென் கொரியாவின் மிக உயரிய இப்பதவிக்கு வரும் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை 58 வயதான ஹான் சியோங்-சுக் பெறுகிறார். கொரிய வரலாற்றில் இவரே நாட்டின் இரண்டாவது பெண் பிரதமராவார்.
தற்போதைய பிரதமர் கிம் மின்-சீக் ஆளும் ஜனநாயகக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவதற்காகத் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ள பின்னணியிலேயே இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.
தென் கொரியாவின் முன்னணி இணையவழி மற்றும் தேடுபொறி நிறுவனமான 'நேவர்' அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அனுபவம் கொண்ட ஹான் சியோங்-சுக், கொரியாவின் டிஜிட்டல் பொருளாதார மாற்றத்திற்குப் பெரிதும் பங்களித்தவராவார்.
இன்று மதியம் சியோலில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அதிபரின் தலைமை அதிகாரி காங் ஹூன்-சிக் இந்த நியமனம் குறித்துப் பின்வருமாறு விளக்கியுள்ளார்.
" ஜனாதிபதி லீ ஜே மியுங்கின் வழிகாட்டலில், நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சியை அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பொதுவான வளர்ச்சியாக மாற்றுவதற்கு ஹான் சியோங்-சுக் சிறந்த தெரிவாவார். குறிப்பாக, செமிகண்டக்டர் உற்பத்திப் பெருக்கம் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார எழுச்சியை, நாட்டின் சிறு மற்றும் நடுத்தர நுகர்வோருக்கும் கொண்டு சேர்க்கும் திறன் இவருக்குண்டு. மேலும், நாட்டின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பப் புரட்சியை இவர் முன்னின்று வழிநடத்துவார் என ஜனாதிபதி நம்புகிறார்."
தென் கொரியாவில் நடைமுறையிலுள்ள அதிபர் ஆட்சி முறையின் கீழ் பிரதமரின் அதிகார வரம்புகள் பெரும்பாலும் நிர்வாகம் மற்றும் சடங்கு ரீதியிலான கடமைகளை மட்டுமே கொண்டதாகும். அனைத்து முதன்மை அதிகாரங்களும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபரிடமே காணப்படும்.
ஆயினும், தற்போதைய 300 உறுப்பினர்களைக் கொண்ட தென் கொரிய நாடாளுமன்றத்தில் அதிபர் லீ ஜே மியுங்கின் ஆளும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ளதால், ஹான் சியோங்-சுக்கின் பிரதமராகப் பதவியேற்கும் நாடாளுமன்ற ஒப்புதல் எவ்வித தடையுமின்றி நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தென் கொரியாவின் புதிய பிரதமராக ஹான் சியோங் - சுக்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space