தமிழகத்தில் திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று முன்தினம் தாக்கல் செய்துவிட்டு, தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தொடர்ந்து 2-வது நாளாக நேற்று சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியின் பல்வேறு பகுதிகளில் ஆட்டோவில் சென்று வீதி வீதியாக உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதற்கிடையே, தொகுதியில் உள்ள சிறுபான்மையின சமூக அமைப்பு ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் வெறுப்பு பிரச்சாரங்கள் நடந்தாலும் தமிழகம் மட்டும் அமைதிப் பூங்காவாக இருக்கிறது.
அதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின். வடமாநிலங்களில் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் சூழல் நிலவுகிறது. அதுபோன்ற நிலையை தமிழகத்தில் கொண்டுவர பாஜக முயற்சிக்கிறது.
திமுக இருக்கும் வரை இங்கு பாஜகவுக்கு இடமில்லை. சிறுபான்மையினரின் உரிமையை பாதுகாப்பதில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து சட்டப்பேரவையில் முதல்முறையாக தீர்மானத்தை திமுக நிறைவேற்றியது.
அதற்கு வழக்கும் தொடர்ந்துள்ளோம். அந்த மசோதாவை கொண்டு வரும்போது அமித்ஷாவுடன் பழனிசாமி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். எனது பொது வாழ்க்கையில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளேன்.
எனினும், இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிரான போராட்டத்தில்தான் முதலில் கைது செய்யப்பட்டேன். அதை பெருமையாக சொல்லிக் கொள்வேன்.
இப்போது நாம் மிக முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். இது மத நல்லிணக்கத்துக்கும், பாசிசத்துக்கும் நடைபெறும் தேர்தல். இத்தேர்தலில் பாஜகவுக்கு நிச்சயம் பாடம் புகட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
திமுக இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை: உதயநிதி ஸ்டாலின் உறுதி
Ad Space
Ad Space
Ad Space
Ad Space