பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சீனிவாசபுரம் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பேசும்போது, "தலைமைச் செயலகம் அமைக்க ஏன் பட்டினப்பாக்கத்தை தேர்ந்தெடுத்தோம் என்பதற்கு ஒரு காரணமும் சொல்லாமல், ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறோம், அதனால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிற எண்ணத்தில் ஆட்சியாளர்கள் நடந்துகொள்வது கண்டனத்துக்குரியது. முதல்வர் விஜய்க்கு 34 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர்.100 சதவீத மக்கள் வாக்களித்து அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட இதர கட்சிகளின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே, தான்தோன்றித்தனமாக அரசு செயல்படக்கூடாது. அவ்வாறு செயல்பட்டால் வேறு விதமான முடிவுகளை நோக்கி நாங்கள் செல்ல வேண்டியிருக்கும். தமிழக நலன் சார்ந்த பிரச்சினைகளில், மற்ற கட்சியினர் கருத்து தெரிவித்தால், அவர்களோடு கலந்து பேசி பொதுவான முடிவுக்கு வரவேண்டும்" என்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "தலைமைச் செயலகம் இடநெருக்கடியில் இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அதற்காக புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பது என்பது பொருத்தமற்றது. இந்த பகுதியானது கடந்த 2004-ல் சுனாமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.மாற்று யோசனைகளை...: கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானம் 160 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அதேபோல் கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்துக்கு சென்றுவிட்டதால், அந்த இடமும் தற்போது இருக்கிறது. இது போன்ற மாற்று யோசனைகளை அரசு ஆராய வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி, ஆலோசனைகளை பெற்று பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.