அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வந்தது.
இந்த கூட்டமைப்பில் தலைமைச் செயலக சங்கமும் உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்ற திட்டத்தை அரசு கடந்த 3-ம் தேதி அறிவித்தது.
பழைய ஓய்வூதியத் திட்டம்போல, உறுதியான ஓய்வூதியம், பணிக்கொடை இருப்பதால் இத்திட்டத்தை ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நிர்வாகிகள் வரவேற்றனர். இதற்கிடையே, அரசு ஊழியர்களிடம் மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத தொகை திருப்பித் தரப்படுமா, தரப்படாதா என்று தெளிவாக கூறப்படாததால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் இத்திட்டத்துக்கு சற்று அதிருப்தியும் உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் கூட்டம் அதன் தலைவர் கு.வெங்கடேசன் தலைமையில் நேற்று மதிய உணவு இடைவேளையின்போது நடந்தது. அப்போது, தலைமைச் செயலக ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு ஏன் ஆதரவு அளிக்கிறீர்கள் என்று கேட்டு, சங்க நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பங்களிப்புத் தொகையை ஓய்வுபெறும்போது திருப்பித் தரவேண்டும்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ஏற்கக் கூடாது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த வேண்டும்’ என்று சங்க நிர்வாகிகளிடம் வலியுறுத்தினர். ஊழியர்களின் திடீர் முற்றுகைப் போராட்டத்தால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
தலைமைச் செயலக சங்கத்தை எதிர்த்து 200 ஊழியர்கள் முற்றுகை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space