இந்தியாவின் கர்நாடக மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் மருத்துவர் இளையதம்பி சிறீநாத் ஆகியோர், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கிருஷ்ணப்பாவின் புதல்வரும், கர்நாடக மாநில சட்டமன்ற உறுப்பினரும் தொழிலதிபருமான பிரியா கிருஷ்ணாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இச்சந்திப்பின் போது, சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் தமிழ் மக்கள் மீது சிங்களப் பேரினவாதம் கட்டவிழ்த்து விட்டுள்ள இனவழிப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதும் அவர்கள் எதிர்கொண்டு வரும் அடக்குமுறைகள் குறித்து விரிவாக தெளிவுபடுத்தப்பட்டது.
ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமை மற்றும் பாதுகாப்பு விவகாரத்தில், தற்போதைய சூழலில் இந்தியாவின் தலையீடும் அழுத்தமான பங்களிப்பும் மிக அவசியமானது என்பது வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழர்களின் அடிப்படை உரிமைகள் தொடர்ந்து நசுக்கப்படும் விதம் குறித்த கவலைகளும், அதற்கான அரசியல் தீர்வின் அவசியமும் இங்கு ஆழமாகப் பதிவு செய்யப்பட்டன.
கடந்த கால கொடூர அடக்குமுறைகளினதும் தமிழின அழிப்பினதும் அழியாத சாட்சியாக செம்மணிப் புதைகுழி காணப்படுகிறது.
எனினும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இன்னமும் தகுந்த நீதி கிடைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதற்கான சர்வதேச நீதியை நிலைநாட்டுவதற்குரிய வலுவான பொறிமுறைகளை உருவாக்குவது குறித்தும், அதற்கான சர்வதேச அழுத்தங்களை எவ்வாறு திரட்டுவது என்பது குறித்தும் அவருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.
இலங்கையில் ஆயுதப் போர் நிறைவடைந்த பின்னரும், தமிழ் மக்களின் தனித்துவ அடையாளத்தையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் சிதைக்கும் நோக்குடன் திட்டமிடப்பட்ட பல்துறைசார் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இது ஒரு பௌதீக ரீதியான அழிப்பாக மட்டுமன்றி, தமிழர்களின் நிலம், சமயம் மற்றும் கலாசார விழுமியங்களை இலக்கு வைத்த ஒரு கட்டமைப்பு ரீதியிலான இனவழிப்பினை (Structural Genocide) சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்டுவருவதையும் தெளிவாக வலியுறுத்தினர்.
தமிழர் தரப்பு எதிர்நோக்கும் அடக்குமுறைகள், சர்வதேச நீதி குறித்து விரிவான கலந்துரையாடல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space