தமிழகத்தில் இதுவரை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நடத்தை விதிகளை அமல்படுத்தும் பணியில் தலா 2,106 பறக்கும் படைகள் மற்றும் நிலைக் கண்காணிப்பு குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதிமீறல் தொடர்பாக ‘சி-விஜில்’ (cVIGIL) செயலி மூலமாக மட்டும் 1,262 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றின்மீது உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 16 புகார்கள் மட்டும் நிலுவையில் உள்ளன.
தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள, அக்கட்சி சார்பில் அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அசாம், மேற்கு வங்க மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் பணிக்காக தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
4 ஐபிஎஸ் அதிகாரிகள் காவல் பார்வையாளர்களாகவும், 42 ஐஏஎஸ் அதிகாரிகள் பொதுப் பார்வையாளர்களாகவும் வெளி மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் 30-ம் தேதி தொடங்குகிறது.
அதன்பிறகு, பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள் தெரியவரும். அந்த வாக்குச்சாவடிகளில் மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுப்பார்கள். அங்கு வாக்குப்பதிவு நிகழ்வுகள் முழுவதும் நேரலை (வெப்காஸ்டிங்) செய்யப்படும்.
நடவடிக்கைகளைக் கண்காணிக்க நுண்பார்வையாளர்களும் நியமிக்கப்படுவார்கள். காஞ்சிபுரத்தில் திருமணத்துக்கு பட்டுச் சேலை வாங்குவதற்காக ஒரு பெண் வைத்திருந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை விதிகளை மீறி கொண்டு செல்லப்பட்ட ரூ.189 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space