தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்களை பள்ளியின் வாயில்கள் முன்பாகவும், இணையதளம் மூலமாகவும் வெளிப்படையாக வெளியிடும் வகையில் உரிய நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தனியார் பள்ளிகளுக்கான இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.லியாகத் அலி என்பவர், கடந்த 2022 அக்.26 அன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் அரசின் வழிகாட்டுதலின்படி வசூலிக்க வேண்டிய கல்விக் கட்டண விவரங்களைக் கோரி மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தார்.
இந்த மனு முதலில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திலிருந்து மாவட்ட கல்வி அலுவலருக்கும், பின்னர் அங்கிருந்து அனைத்து மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், அதன்பிறகு மீண்டும் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும் உரிய காலக்கெடுவுக்குள் எந்தத் தகவலும் அளிக்கப்படாததால் லியாகத் அலி இது தொடர்பாக மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் வி.பி.ஆர்.
இளம்பரிதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை நோக்கமே வெளிப்படைத்தன்மைதான். மனுதாரர் கோரிய தகவல்களை மூன்றரை ஆண்டுகளாக முழுமையாக வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிப்பு செய்து வந்துள்ளனர்.
இறுதியாக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர். இதற்காக தற்போது பணியில் உள்ள பொதுத் தகவல் அலுவலரான கோவை மாவட்ட கல்வித் துறை அதிகாரி, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரத்தை இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை பெற்றுக்கொண்டது குறித்து மனுதாரர் வரும் ஜூன் 15 அன்று நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்டும்.
அதேபோல இந்த மனுவை தேவையில்லாமல் மாவட்ட கல்வி அதிகாரிக்குத் திருப்பிவிட்டது ஏன் என்பது குறித்தும், இதற்காக ஏன் உங்களுக்கும் தலா ரூ.25 ஆயிரத்தை அபராதமாக விதிக்கக்கூடாது என்பது குறித்தும், அப்போது பணியில் இருந்த முதன்மைக் கல்வி அதிகாரி மற்றும் அவரது நேர்முக உதவியாளர், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் வரும் ஜூன் 15-க்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்.
பெற்றோர் தங்களது குழந்தைகளின் எதிர்காலம் கருதி, பொருளாதாரத் தகுதியை, வரம்பை மீறி கல்விக்காக அதிக பணம் செலவழித்து வருகின்றனர். அந்த ஒவ்வொரு ரூபாய்க்கும் வெளிப்படைத்தன்மையுடன் கணக்கு விவரங்களை தெரிவிக்க வேண்டியது கல்வி நிறுவனங்களின் அத்தியாவசியக் கடமை. எனவே தனியார் பள்ளிகளுக்கான இயக்குநர் எஸ்.சுகன்யாவை இந்த ஆணையம் பொதுத்தகவல் ஆணையராக நியமிக்கிறது.
அவர் இனிவரும் காலங்களில் அரசு உத்தரவுப்படி அனைத்து தனியார் மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை வகுப்பு வாரியாக பள்ளி வாயில்கள் முன்பாகவும், இணையதளங்களின் மூலமாகவும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.
கட்டண விவரங்களை மாணவர் சேர்க்கையின்போது வழங்கப்படும் விண்ணப்பங்களிலேயே முறையாக அச்சிட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுப்படி பள்ளி நிர்வாகங்கள் செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரி ஜூன் 15 அன்று நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.
தனியார் பள்ளிகளில் கட்டண விவரங்களை வெளிப்படையாக தெரிவிக்க நடவடிக்கை
Ad Space
Ad Space
Ad Space
Ad Space