தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில், 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
தஞ்சாவூரில் ராஜராஜ சோழனையும், அவரது ஆட்சி நிர்வாகத்தையும் பெருமைப்படுத்தும் வகையில், மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2023-ம் ஆண்டு மார்ச் 20-ம் தேதி சட்டப் பேரவையில், முதல்வர்ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தஞ்சாவூரில் அருங்காட்சியகம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அருகே உள்ள காலியிடம் உட்பட 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.
இதையடுத்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன் ஆகியோர் தஞ்சாவூருக்கு வருகை தந்து, இடங்களை பார்வையிட்டு சென்றனர். ஆனால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் சோழர் அருங்காட்சியகம் கட்டுவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. அப்போது தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் அருகே தேர்வு செய்யப்பட்ட 12 ஏக்கர் இடம் போதாது என தெரிவிக்கப்பட்டது.
ரூ.56.41 கோடி மதிப்பில்... எனவே, தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்தில் 50 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு ரூ.56.41 கோடி மதிப்பில் அருங்காட்சியகமும், 125 அடி உயரத்தில் மாமன்னன் ராஜராஜசோழன் சிலையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. குஜராத்தில் சர்தார் வல்லபபாய் படேலுக்கு அமைக்கப் பட்ட சிலை போன்று, ராஜராஜ சோழன் சிலையை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என வரலாற்று ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கரில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space