டெங்கு பாதிப்பை குறைக்க நடவடிக்கை தேவை: மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
Ad Space
Ad Space
டெங்கு காய்ச்சல் பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சுகாதாரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அதிகமான வெப்பநிலை, சீரற்ற மழை பொழிவு போன்றவை டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக உள்ளன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தமிழகத்தில் தீவிரமாக இருந்தது. உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் காரணமாக கடந்த ஆண்டு பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்தது.
நடப்பாண்டில் மேலும் குறைப்பதற்கு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதன்படி, சுகாதாரத் துறை இணையதளத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் அவசியம் பதிவேற்ற வேண்டும்.
அப்போதுதான், நிகழ் நேர தகவல்கள் கிடைக்கப் பெற்று டெங்கு பரவலை தடுக்க முடியும். நோய் பரப்பும் பூச்சிகள், கொசுக்களை கண்காணித்து அவற்றின் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுப்பது முக்கியம் ஆகும்.
அரசு மருத்துவமனைகளில் டெங்கு பரிசோதனைகளை கட்டணமில்லாமல் மேற்கொள்வதற்கான கட்டமைப்பு தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக, பரிசோதனை உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
கொசு உற்பத்திக்கு இடமளிக்காத வகையில் வீடுகள், தொழில்நிறுவன வளாகங்களை பராமரிக்க வேண்டும். நோய் சார்ந்த சூழல்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Space
Ad Space