தங்கை (வயது 11) கைப்பேசியைத் தர மறுத்த காரணத்தால் 14 வயது சகோதரன் தங்கையின் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள நீதிமன்ற வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை, கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவனை இன்று சனிக்கிழமை (30) கைது செய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வியாழக்கிழமை (28) மாலை ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சிறுமி குளியலறை தண்ணீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பொலிஸ் விசாரணையில் தெரியவருவதாவது,
சிறுமியின் தாயார் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியில் சென்றுவிட்ட நிலையில், அண்ணனும் தங்கையும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.
அவ்வேளை சகோதரி வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியை, டிக் டொக் பார்ப்பதற்காகத் தருமாறு சகோதரன் கேட்டுள்ளார். அதற்கு தங்கை கையடக்கத் தொலைபேசியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
சண்டை முற்றிய நிலையில் 14 வயது அண்ணன் தனது தங்கையின் கழுத்தை நெரித்ததில் தங்கை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பின்னர், தங்கையை இழுத்துச் சென்று குளியலறையில் உள்ள தண்ணீர்த் தொட்டியில் போட்டுவிட்டு அண்ணன் பக்கத்து வீட்டுக்குச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் கழித்து, வெளியிலிருந்து வீட்டுக்குள் நுழைந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடியபோது குளியலறை தண்ணீர்த் தொட்டியில் 11 வயது மகள் வீழ்ந்து கிடப்பதை கண்டு, மகளை மீட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
எனினும், அவர் முன்னரே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தபோதே சிறுவன் தனது சகோதரியை கொலை செய்தமை தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, சிறுவனை கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space