ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு செப்டம்பர் 7ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு
Ad Space
Ad Space
இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் குற்றஞ்சாட்டி பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கைக் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி விசாணைக்கு எடுக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு வெள்ளிக்கிழமை (31) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான ஞானசார தேரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக வீரசூரிய நீதிமன்றில் விடயங்களை முன்வைக்கையில், இவ்வழக்கின் சாட்சியமாக பெயரிடப்பட்டுள்ள இறுவெட்டு ஒன்றை முறைப்பாட்டாளர்கள் இதுவரை தமக்கு வழங்வில்லை.
அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்துரையாடி இதனை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும்,அதற்கமைய சட்டமா அதிபருடன் கலந்துரையாடலை மேற்கொண்டு அதன் முன்னேற்றத்தை அறிவிப்பதற்குத் திகதியொன்றை வழங்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றைக் கேட்டுக்கொண்டார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதிபதி, இவ்வழக்குடன் தொடர்புடைய இருவெட்டை அடுத்த வழக்குத் திகதிக்கு முன்னதாக பிரதிவாதிகள் தரப்பிற்கு நிச்சயமாக வழங்கி வைக்குமாறு அரசுச் சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக வழக்கினை செப்டம்பர் மாதம் 07 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
Ad Space
Ad Space