யாழ்ப்பாணம், செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை தரப்பினரிடமோ அல்லது மயான சபையினரிடமோ எவ்வித உத்தியோகபூர்வப் பதிவுகளும் இல்லை என சட்டத்தரணி வி.எஸ். நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"இது ஒரு இந்து மயானமாகும். இங்கு சட்ட ரீதியான அடக்கங்களும் இடம்பெற்றிருக்கலாம். உதாரணமாகச் சிறுவர்கள் உயிரிழந்தால் உரிய அனுமதி பெறப்பட்டு அடக்கம் செய்யப்படுவது வழமை.
எனினும், இங்கு பெருமளவிலான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுவதைப் பார்க்கும்போது, இங்கு ஏதோவொரு குற்றம் நடந்துள்ளதாகவும், உடல்கள் அவசரமாகப் புதைக்கப்பட்டுள்ளதாகவும் நமது சாதாரண கண்களுக்கே தெளிவாகப் புலனாகிறது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கைகள் வெளிவந்த பின்னரே மேலதிக தகவல்களைத் துல்லியமாகக் கூற முடியும்.
இங்கு மீட்கப்பட்ட சில மனித எலும்புக்கூடுகள் சட்ட ரீதியாகப் புதைக்கப்பட்டதற்கான ஆடைகளுடனும், சவப்பெட்டிகளுடனும் காணப்பட்டன. சில இடங்களில் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதற்கான சான்றுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை இந்த மயானத்தில் புதைக்கப்பட்டமைக்கான எந்தவொரு பதிவுகளும் இந்து மயான சபையினரிடம் இல்லை.
அதேவேளை, இது தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தை அணுகி வினவியபோது, அவர்கள் இந்தச் செம்மணி சிந்துபாத்தி இந்து மயானத்தில் சடலங்களைப் புதைப்பதில்லை என்றும், தாம் சடலங்களை அடக்கம் செய்வதற்கு 'கோம்பயன்மணல்' மயானத்தையே பயன்படுத்துவதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர்" எனச் சுட்டிக்காட்டினார்.
செம்மணி மயானத்தில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் : வைத்தியசாலை தரப்பும் மயான சபையும் மறுப்பு!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space