யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக அரசாங்கம் ஏற்கனவே தனது தெளிவான நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் நடைபெறும் இந்தச் செயற்பாடுகளில் அரசாங்கத்திற்கு எவ்வித பிரச்சினையும் இல்லை என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மோரேனோ தலைமையிலான ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய விசேட தூதுக்குழுவினர் செம்மணி புதைக்குழி அகழ்வுப் பணிகளை நேரில் பார்வையிடவுள்ளனர்.
இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து வினவிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. நீதிமன்ற மருத்துவ அதிகாரி, நீதி அமைச்சு உட்பட இது தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பான குழுவினர் அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள் அவ்வப்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இதில் அரசாங்கத்திற்கு மறைப்பதற்கு எதுவுமில்லை என்பதால், இந்தச் செயற்பாடுகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை.
ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினரின் இந்த கண்காணிப்பு விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு விசேடமாக எந்தவொரு அறிவிப்பும் வழங்கப்படவில்லை.
அகழ்வுப் பணிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் முற்றிலும் சட்ட ரீதியானவையாவே இருக்கும். அந்த வகையில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளுக்கு அமையவே செம்மணி புதைக்குழி அகழ்வின் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும் என்றார்.
செம்மணி புதைக்குழி அகழ்வு : நீதிமன்ற உத்தரவுக்கமையவே அடுத்த கட்ட நடவடிக்கைகள்!
Ad Space
Ad Space
Ad Space
Ad Space