சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக சிவானந்த பை நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல அலுவலகம் (சென்னை வானிலை ஆய்வு மையம்) சென்னையில் இயங்கி வருகிறது.
இதன் தலைவராக இருந்த எஸ்.பாலசந்திரன் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து, கருவிகள் பராமரிப்புப் பிரிவு தலைமை பொறுப்பில் இருந்த ‘எஃப்’ நிலை விஞ்ஞானி பி.அமுதாவுக்கு கூடுதல் பொறுப்பாக, தென் மண்டலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில், ‘ஜி’ நிலை விஞ்ஞானியான சிவானந்த பை, தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலை பட்டமும், டெல்லி ஐஐடியில் முதுநிலை தொழில்நுட்ப பட்டமும், புனே பல்கலைக்கழகத்தில் வளிமண்டல அறிவியலில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
கடந்த 1992 நவம்பரில் இந்திய வானிலை ஆய்வுத் துறையில் விஞ்ஞானியாக சேர்ந்தார். அத்துறையில் ஆராய்ச்சி, செயல்பாட்டு வானிலை, காலநிலை சேவைகள், கல்வி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 34 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2018-2022 காலகட்டத்தில் புனேயில் உள்ள காலநிலை ஆய்வு மற்றும் சேவைகள் அலுவலகத்தில் கூடுதல் தலைமை இயக்குநராகவும், 2022-23 காலகட்டத்தில் கேரள அரசின் காலநிலை மாற்ற ஆய்வுகள் நிறுவனத்தின் இயக்குநராகவும் பணியாற்றினார்.
சென்னை வானிலை ஆய்வு மைய தலைவராக சிவானந்த பை பொறுப்பேற்பு
Ad Space
Ad Space
Ad Space
Ad Space