சென்னையில் சிங்கப்பெண் அதிரடிப் படையின் முதல் வழக்கு
Ad Space
Ad Space
வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பிடித்து, மகளிர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதன்மூலம், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை சென்னையில் தனது முதல் கணக்கை தொடங்கியுள்ளது.
பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் விஜய் கடந்த 9-ம் தேதி தொடங்கி வைத்தார்.
பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பொது இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்த படையைச் சேர்ந்த 70 குழுக்கள் தமிழகம் முழுவதும் முதல் கட்டமாக அனுப்பப்பட்டுள்ளன.
அவர்கள் நேற்று 2-வது நாளாக பணியில் ஈடுபட்டனர். சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12 குழுக்கள் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இவர்கள் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறு கிறதா என தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான போலீஸாருடன் ஒருங்கிணைந்தும் பணியாற்றுகின்றனர்.
இந்நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் 37 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
கணவர், மகள்கள் வெளியே சென்றிருந்தனர். அந்த நேரத்தில் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற நபர் மதுபோதையில் அப்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். உடனே அப்பெண் அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளார்.
இதைக் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டனர். இதையறிந்த அந்த நபர் பெண்ணை கட்டிலில் தள்ளிவிட்டு தப்பி ஓடினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சிங்கப்பெண் சிறப்பு படையைச் சேர்ந்த எஸ்ஐ ராஜேஸ்வரி, பெண் காவலர்கள் சங்கீதா, தீபிகா ஆகியோர் விரைந்து சென்று தப்பியோடிய
சுரேஷை தேடிக் கண்டு பிடித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சுரேஷை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை ஆரம்பிக்கப்பட்ட பின், அவர்கள் மூலம் பதியப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
Ad Space
Ad Space