முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தனிப்பட்ட செயலாளரும், புதிய மக்கள் முன்னணி அமைப்பின் தலைவருமான சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் இன்று புதன்கிழமை (20) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் புலனாய்வுப் பிரிவு பிரதானி சுரேஷ் சலே உள்ளிட்ட இராணுவத்தினருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவர்களுக்கு ஆதரவு வழங்கக் கோரியும் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பெரும் பதற்றம் நிலவியது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல் ஆதரவாளர்கள், பௌத்த தேரர்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
மேலும் போராட்டக் குழுவினர், சுரேஷ் சலே உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் பழிவாங்கல் செயற்பாடுகளைக் கண்டித்து மகஜர் ஒன்றை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அல்லது ஜனாதிபதி செயலகத்தின் பொறுப்புவாய்ந்த சிவில் அதிகாரி ஒருவரிடம் கையளிப்பதற்காக ஜனாதிபதி செயலகத்தை நோக்கி முன்னோக்கி நகர முற்பட்டனர்.
எனினும் போராட்டக்காரர்கள் முன்னோக்கிச் செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. போராட்டக் களத்தில் இருந்த தேரர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் "அநுர குமார போகும் பாதை பிரபாகரனின் பாதையா? மக்களின் பலமா?" என உரத்த குரலில் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
கடந்த காலங்களில் வசந்த சமரசிங்க, விமல் ரத்நாயக்க, மஹிந்த ஜயசிங்க போன்றோர் ஜே.வி.பி.யின் போராட்டங்களின்போது ஜனாதிபதி செயலகத்தின் வாயில்களை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த வரலாறுகள் உள்ளன. ஆனால் நாம் மிகவும் அமைதியான முறையில் எமது கோரிக்கையை முன்வைக்க வந்துள்ளோம். எமக்கு அரசியல் நியமன அதிகாரிகளைச் சந்திக்கத் தேவையில்லை. சிவில் சேவை அல்லது அரச நிர்வாக சேவையின் பொறுப்பு வாய்ந்த செயலாளரைச் சந்திக்கவே அனுமதி கோருகிறோம் என சுகீஸ்வர பண்டார இதன்போது தெரிவித்திருந்தார்.
போராட்டக்காரர்கள் முன்னோக்கிச் செல்வதை தடுப்பதற்காக சம்பவ இடத்திற்கு மேலதிக பொலிஸாரும் இராணுவத்தினரும் வரவழைக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி செயலகத்தில் இருந்து வருகை தந்த மக்கள் தொடர்பு அதிகாரி ஒருவர் மகஜரைப் பெற்றுக்கொள்ள முன்வந்தபோதிலும், தமக்கு முறையான அதிகாரியிடமே அதனை ஒப்படைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் அதனை அவரிடம் வழங்க மறுப்பு தெரிவித்திருந்ததுடன், கடும் தொனியில் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
சுரேஷ் சலேவுக்கு ஆதரவாக ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டம்
Ad Space
Ad Space
Ad Space
Ad Space